ட்ரம்ப் pt web
உலகம்

தாக்கியது துப்பாக்கி குண்டுதானா? கென்னடி கொலை விவரத்தை தேடிய க்ரூக்... FBI இயக்குநர் சொன்னதென்ன?

ட்ரம்ப் படுகொலை முயற்சியில் ஈடுபட்ட க்ரூக், முன்னாள் அதிபர் கென்னடி கொலை தொடர்பான விவரத்தை இணையத்தில் தேடியதாக FBI இயக்குநர் தெரிவித்துள்ளார்.

Angeshwar G

ட்ரம்ப் மீது நடந்த படுகொலை முயற்சி

அமெரிக்க அதிபர் தேர்தல் நடப்பாண்டு நடைபெற உள்ளது. ஏகப்பட்ட பரபரப்புகளுக்கு மத்தியில், தொடர் பரப்புரைகள் நடந்து வருகின்றன. இத்தகைய சூழலில்தான் கடந்த 13 ஆம் தேதி, குடியரசுக் கட்சி வேட்பாளரான முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப், பென்சல்வேனியா மாகாணத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டபோது, அவரை படுகொலை செய்ய முயற்சி நடந்தது ஓட்டுமொத்த உலகத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

டொனால்டு ட்ரம்ப் - தாமஸ் மேத்யூ க்ரூக்

குடியரசுக் கட்சி சார்பில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில், ஏராளமான ஆதரவாளர்கள் பங்கேற்றிருந்தனர். மேடையில் நின்றபடி தனது ஆதவாளர்களிடம் ட்ரம்ப் உரையாடிக் கொண்டிருந்தார். மிகவும் ஆரவாரத்திற்கு மத்தியில் துப்பாக்கிச் சுடும் சத்தம் கேட்டது. அங்கிருந்தவர்கள் அலறியடித்து ஓட தொடங்கினர். மேடையில் பேசிக் கொண்டிருந்த ட்ரம்பின் வலது காதில், துப்பாக்கி குண்டு பட்டு சென்றது. இதில் ரத்தம் அவரது முகத்தில் வழிந்தது. உடனடியாக பாதுகாப்புப் படையினர் அவரை பாதுகாத்தப்படி காரில் ஏற்றி, மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி வேகமாக பரவின.

துப்பாக்கி குண்டுகளா என்பதில் சந்தேகம்

துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை பாதுகாப்புப் படையினர் விரட்டிச் சென்று சுட்டுக் கொன்றனர். ட்ரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியவரின் பெயர் தாமஸ் மேத்யூ க்ரூக் என்றும், அவரது வயது 20 என்றும் எஃப்.பி.ஐ. அதிகாரிகள் தெரிவித்தனர். பரப்புரை பொதுக்கூட்டம் நடந்த இடத்துக்கு வெளியே உயரமான ஓரிடத்திலிருந்து மேடையை நோக்கி மேத்யூ க்ரூக் சுட்டதாகவும், அவர் பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள பெத்தேல் பார்க் பகுதியைச் சேர்ந்தவர் என்றும் எஃப்.பி.ஐ. அதிகாரிகள் கூறினர்.

இந்நிலையில்தான் FBIன் இயக்குநர் கிறிஸ்டோபர் வ்ரே புதிய தகவல் ஒன்றைத் தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் அன்று அமெரிக்க ஹவுஸ் ஜூடிசியரி கமிட்டி முன் விசாரணையின் விபரங்களைத் தெரிவித்த அவர், “முன்னாள் அதிபர் ட்ரம்ப் விவகாரத்தைப் பொறுத்தவரை அவரைத் தாக்கியது துப்பாக்கி குண்டுகளா அல்லது வேறு ஏதேனும் துண்டுகளா என்பதில் சந்தேகம் உள்ளன. அது வேறு எங்காவது விழுந்திருக்குமா என்பது குறித்தும் எனக்குத் தெரியவில்லை. அவர் AR வகையிலான துப்பாக்கியைப் பயன்படுத்தினார்.

கென்னடி கொலை தொடர்பாக தேடிய க்ரூக்

தாமஸ் மேத்யூ ப்ரூக் சந்தேகத்திற்கிடமான நபராக அடையாளம் காணப்பட்ட போதிலும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள அவருக்கு அனுமதிக்கப்பட்டது. ட்ரம்ப் சீக்ரெட் சர்வீஸ் ஏஜெண்ட்களால் பாதுகாக்கப்படுகிறார். இந்த படுகொலை முயற்சி அந்த ஏஜெண்களின் தோல்விகளில் ஒன்று. முன்னாள் அதிபர் ஜான் கென்னடி படுகொலை தொடர்பான விவரங்களையும் க்ரூக்ஸ் கூகுளில் தேடியுள்ளார். கென்னடியிடம் இருந்து ஓஸ்வால்ட் (கென்னடியை கொன்ற கொலையாளி) எவ்வளவு தூரத்தில் இருந்தார் என்று குறிப்பிட்டு க்ரூக்ஸ் தேடியுள்ளார். க்ரூக்ஸ் மடிக்கக்கூடிய வகையிலான துப்பாக்கிகளை வைத்திருந்தது அதை மறைப்பதற்கு எளிதாக இருந்தது” என தெரிவித்துள்ளார்.

தாக்குதலுக்குப் பிறகு ட்ரம்ப் பட்லர் நினைவு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றார். ஆனால் அவரது தரப்பு காயம் மற்றும் மருத்துவ சிகிச்சைத் தொடர்பான விவரங்களைப் பகிர்ந்துகொள்ளவில்லை. மருத்துவமனையில் இருந்த மருத்துவர்களும் செய்தியாளர் சந்திப்புகளுக்கு தயாராக இல்லை. சிகிச்சையில் இருந்த ட்ரம்ப் சிகிச்சைத் தொடர்பான மருத்துவப் பதிவுகளையும் வெளியிடவில்லை.

FBI இயக்குநர் ரேயின் கருத்துகளுக்கு குடியரசுக் கட்சியினர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். ரேயின் கருத்து என்பது சதி என்றும் பொறுப்பில்லாத தன்மை என்றும் கடுமையாக விமர்சித்துவருவதும் குறிப்பிடத்தக்கது.