வெளிநாட்டு எதிரிகளிடம் இருந்து அமெரிக்க கணினி தொலைதொடர்புகளை பாதுகாக்கும் வகையில், நெருக்கடி நிலையை பிறப்பித்து அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
ஹுவாய் நிறுவனம் தயாரிக்கும் மென்பொருட்களை பயன்படுத்தி, சீனா தனக்கான தகவல்களை உளவு பார்த்து வருவதாக பல்வேறு நாடுகள் சந்தேகம் எழுப்பி வந்தன. இந்நிலையில், அமெரிக்காவின் தகவல் தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட அறிவுசார் விவகாரங்கள் திருடப்படுவதும், உளவுப் பார்க்கப்படுவதையும் தடுக்கும் வகையில், தகவல் தொழில்நுட்பத் துறையில் நெருக்கடி நிலையை பிறப்பித்து அதிபர் ட்ரம்ப் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.
எந்தவொரு வெளிநாட்டு நிறுவனத்தின் பெயரையும் அவர் குறிப்பிடவில்லை என்ற போதிலும், சீனாவின் ஹுவாய் தொலைதொடர்பு நிறுவனத்தை முடக்கவே இந்த உத்தரவை அவர் பிறப்பித்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த நெருக்கடி நிலையால், வெளிநாட்டு தொலைதொடர்பு நிறுவனங்கள், அமெரிக்க நிறுவனங்களை பயன்படுத்திக் கொள்வது தடுக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
முன்னதாக ஈரான் மீது அமெரிக்கா தடை விதித்த நிலையில் அதை மீறி அந்நாட்டுக்கு உதவி செய்ததாக ஹுவாய் நிறுவன தலைமை நிதி அதிகாரி மெங் வாங்சோவை அமெரிக்கா கைது செய்ய உத்தரவு பிறப்பித்தது. இதன் காரணமாக அவர் கனடாவில் கைது செய்யபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.