அமெரிக்காவில் 47வது அதிபராக டொனால்டு ட்ரம்ப் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஜனவரி 20 ஆம் தேதி அவர் பதவியேற்க உள்ளார். வெள்ளை மாளிகையில் அதற்கான பணிகள் வேகம்பிடித்து வருகின்றன. உலகம் முழுவதும் அவரைச் சுற்றிப் பல்வேறு சவால்கள் காத்திருக்கும் வேளையில், தற்போது தேசிய அவசர நிலையை பிரகடனப்படுத்த, ட்ரம்ப் முடிவெடுத்திருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளில் ஒன்றான அமெரிக்காவுக்குச் செல்லும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதில், பலரும் சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறி வருகின்றனா். சொந்த நாடுகளில் குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவது உள்ளிட்ட செயல்களில் சிக்கியவர்கள் பலரும் அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைகின்றனா். அவ்வாறு நுழைபவர்களால் அமெரிக்கர்கள் பலர் பாதிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், சமீபத்திய அதிபர் தேர்தல் வெற்றிபெற்ற டொனால்டு ட்ரம்ப், பிரசாரத்தின்போது ’அமெரிக்கா அமெரிக்கர்களுக்கே’ என முழக்கம் மேற்கொண்டார். தொடர்ந்து அவர், தாம் மீண்டும் அதிபரானால், உடடினயாக சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறியவர்களை நாடு கடத்துவதாகத் தெரிவித்திருந்தார். இது அமெரிக்கர்களிடம் நல்ல ஆதரவைத் தந்தது.
இதையடுத்து அவர் மீண்டும் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து அதற்கான நடவடிக்கைகளில் ட்ரம்ப் ஈடுபட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்க ராணுவத்தைக் கொண்டு அங்கு வசிக்கும் சட்டவிரோத குடியேற்ற மக்களைக் கொத்தாக நாடு கடத்துவதற்கு ட்ரம்ப் முடிவுசெய்துள்ளார். இதற்காக அமெரிக்காவில் அவசரகால பிரகடனத்தை அமல்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது.
இதனை சமூக வலைத்தளம் ஒன்றில் டொனால்ட் ட்ரம்ப் உறுதி செய்துள்ளார். சமூக வலைதளம் ஒன்றில், ’டொனால்டு ட்ரம்ப் தலைமையிலான ஆட்சியில், தேசிய அவசரநிலை கொண்டுவரப்படும். ராணுவத்தைப் பயன்படுத்தி சட்டவிரோதமாக புலம்பெயர்ந்தவர்களை நாடு கடத்த உள்ளார்' என பயனர் ஒருவர் பதிவிட்டிருந்தார். இதுதொடர்பாக பதிலளித்த ட்ரம்ப், “அது உண்மைதான்” என்று ஒப்புக்கொண்டுள்ளார். இதனால் அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் அச்சம் அடைந்துள்ளனா். அமெரிக்காவில் தற்போது 1.1 கோடி பேர் சட்டவிரோதமாக தங்கி உள்ளனா். ட்ரம்பின் இந்த நடவடிக்கையால், நேரடியாக சுமார் 2 கோடி குடும்பங்களை பாதிக்கும் என்று கூறப்படுகிறது.