சீனாவில் தற்கொலை செய்து கொண்ட உரிமையாளரின் வருகைக்காக அதே இடத்தில் 4 நாட்களாக நாய் காத்திருப்பது பார்ப்பவர்களின் மனதை உருக்குகிறது.
நம் வாழ்வில் ஆயிரம் பேர் வந்து செல்வார்கள். ஆனால் ஒரு நாயின் அன்பும் என்றென்றும் நிலைத்திருக்கும் என்பதற்கு பல உதாரணங்கள் இருந்துள்ளன. ஒரு நாய் எவ்வளவு பக்தியுடன் இருக்க முடியும் என்பதற்கு உதாரணமாய் சீனாவில் தற்போது ஒரு சம்பவம் அரங்கேறியிருக்கிறது. சீனாவில் தற்கொலை செய்து கொண்ட உரிமையாளரின் வருகைக்காக அதே இடத்தில் 4 நாட்களாக நாய் ஒன்று காத்திருக்கிறது.
வுஹானில் உள்ள யாங்சே பாலத்தின் நடைபாதையில் அந்த நாய் அமர்ந்திருக்கிறது. கடந்த 30-ஆம் தேதி நாயின் உரிமையாளர் யாங்சே பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. இதையடுத்து அந்த நாயை வளர்க்க அப்பகுதியில் இருப்பவர்கள் முயன்றும் அது நிறைவேறவில்லை.
இதுகுறித்து வுஹான் சிறு விலங்கு பாதுகாப்பு சங்கத்தின் இயக்குனர் டு ஃபேன் கூறுகையில், “மக்கள் அந்த நாய்க்கு உதவ அணுகியபோது, அது பயத்தில் ஓடியது. அது மீண்டும் ஒரு உண்மையான உரிமையாளரை தேடிக்கொண்டிருக்கிறோம்” எனத் தெரிவித்தார்.
இதேபோல் மற்றொரு சம்பவம் அரங்கேறியுள்ளது. வுஹான் தைகாங் மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதியவர் ஒருவர் கடந்த பிப்ரவரி மாதம் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.அவருடன் அவர் வளர்த்த நாய் ஒன்றும் வந்திருந்தது. இதையடுத்து சிக்ச்சைப் பலனின்றி அந்த முதியவர் உயிரிழந்தார். ஆனால் அவர் வளர்த்து வந்த நாய் மருத்துவமனையில் அவரின் வருகைக்காக காத்திருக்கிறது.