அமெரிக்காவில் அடுத்த மாதம் 5ஆம் தேதி நடைபெற இருக்கும் அதிபர் தேர்தலுக்கு இன்னும் முழுமையாக ஒரு மாதம்கூட இல்லை. குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப்வும் அவரை எதிர்த்து, ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபரான கமலா ஹாரிஸும் களத்தில் உள்ளனர். ட்ரம்ப் - கமலா ஹாரிஸ் நேரடி விவாதத்துக்குப் பின்னர் இரு தலைவர்களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுவரும் நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தல் அங்கு சூடுபிடித்துள்ளது.
அந்த வகையில், கமலா ஹாரிஸுக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக இருப்பதாக பல்வேறு கருத்துக்கணிப்புகளும் வெளியாகி வருகின்றன. இந்தப் பரபரப்பான கட்டத்தில் இரு தலைவர்களையும் பற்றிய பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகிறது. அதில் உண்மைக்குப் புறம்பாகவும் சில தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன. அந்த வகையில், டொனால்டு ட்ரம்ப், 2020ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் தோல்வியைத் தழுவிய பிறகு, ரஷ்ய அதிபர் புதினிடம் 7 முறை போனில் பேசியதாக அமெரிக்க பத்திரிகையாளர் எழுதியுள்ள புத்தகத்தில் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து பாப் உட்வார்ட் என்பவர் தாம் எழுதியிருக்கும் புத்தகத்தில் எழுதியிருப்பதாகக் கூறப்படுகிறது. அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேற்றப்பட்டது முதல் பலமுறை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புத்தகத்தில் உள்ள தகவல்களின்படி, 2021ஆம் ஆண்டு வெள்ளை மாளிகையைவிட்டு டொனால்டு ட்ரம்ப் வெளியேறிய பிறகு, ரஷ்ய அதிபர் புதினை கிட்டத்தட்ட ஏழு முறை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார். மேலும் ஒருசமயம், தான் பேசுவதை உதவியாளர்கள் கேட்கக்கூடாது என்பதற்காக, அவர்களை வெளியேற்றிவிட்டு ட்ரம்ப், ரஷ்ய அதிபர் புதினுடன் பேசினார் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இரண்டு பேரும் என்ன பேசினார்கள் என்பதை புத்தகம் விவரிக்கவில்லை. அமெரிக்க பத்திரிகையாளரின் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள இத்தகவல்கள் அதிபர் தேர்தலில் பேசுபொருளாகி உள்ளது.
ஆனால், இதை டொனல்டு ட்ரம்ப் மறுத்துள்ளார். அந்தப் புத்தகத்தில் உள்ள தகவல்களில் துளியும் உண்மையில்லை என தெரிவித்துள்ளார். அதுபோல், ரஷ்ய அரசும் அதிபர் புதினிடம் ட்ரம்ப் தொலைபேசியில் பேசவில்லை என்று தெரிவித்துள்ளது.