இந்தியா கனடா உறவை பாதித்த ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை விவகாரம் முகநூல்
உலகம்

ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை விவகாரம் | இந்தியா மீது தடைவிதிக்க போகிறதா கனடா?

PT WEB

காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்தாண்டு சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம் இந்தியா - கனடா உறவில் மேலும் விரிசல்களை ஏற்படுத்தி வருகிறது. இதில் கனடாவிலிருந்து இந்திய தூதரை திரும்பப்பெற்ற மத்திய அரசு, டெல்லியிலுள்ள கனடா தூதரை வெளியேறவும் உத்தரவிட்டுள்ளது.

நிஜ்ஜார் கொலை விவகாரத்தில் இந்திய தூதர்களை நேரடியாக குறைகூறும் வகையில் கனடா பிரதமர் ட்ரூடோ பேசியது மேலும் சிக்கலை அதிகரித்துள்ளது. தங்கள் மண்ணில் இந்திய அரசு காலிஸ்தான் ஆதரவாளர்களுக்கு எதிராக வன்முறைகளை நிகழ்த்தி வருவதாகவும், இதற்கு பிஷ்னோய் கூலிப்படையை பயன்படுத்திக்கொள்ள முயன்றதாகவும் கனடா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவுக்கு தடை விதிப்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் தங்கள் பரிசீலனையில் இருந்து வருவதாக கனடா வெளியுறவு அமைச்சர் மெலானி ஜோலி தெரிவித்துள்ளார்.

எனினும் கனடா மண்ணில் வன்முறை நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக அந்நாட்டு அதிகாரிகள் முன்வைத்த குற்றச்சாட்டுகளை இந்தியா முற்றாக நிராகரித்துள்ளது. இதற்கிடையே ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கு விசாரணையில் கனடாவிற்கு இந்தியா ஒத்துழைக்கவில்லை என அமெரிக்க வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர் தெரிவித்துள்ளார்.