gaza hospital pt web
உலகம்

"இஸ்ரேல் குண்டு போடட்டும்... நாங்கள் வெளியேற மாட்டோம்..." காஸாவிற்காக துணை நிற்கும் மருத்துவர்கள்!

“ஒரு மருத்துவரா, செவிலியரா நாங்க செய்றதுதான் சரி. எங்களால முடிஞ்ச வரைக்கும் காயம்பட்டவங்களை குணப்படுத்த போறோம்” காசா மருத்துவர்கள்

Karthick

ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்கு இஸ்ரேல் எதிர் தாக்குதல் நடத்த ஆரம்பித்து ஒரு வாரம் கடந்துவிட்டது. காஸாவிலிருந்து வரும் செய்திகள் மிகுந்த துயரமிக்கவை.

மருத்துவமனைகள், அப்பாவி மக்கள் குவிந்துகிடக்கும் பள்ளிக்கூடங்கள், மசூதிகள் என்று கூட யோசிக்காமல் இஸ்ரேல் குண்டுமழை பொழிவதாக தகவல்கள் வெளியாகின்றன.

நேற்று அங்கிருக்கும் சில மருத்துவமனைகளுக்கு இஸ்ரேல் ராணுவத்திடமிருந்து எச்சரிக்கை வந்திருக்கிறது. வெளிப்படையாகவே மருத்துவமனையின் மீது குண்டு வீசப் போகிறோம் என அறிவித்திருக்கிறார்கள். "மருத்துவமனையில் குண்டு வீசுவதை அவர்கள் பெருமையாக உணர்கிறார்கள்" என்கிறார் அந்த மருத்துவமனையில் வேலை பார்க்கும் அசால அல் பாட்ஸ்.

வாழ்வுக்கும் சாவுக்கும் இடையில இருக்கோம்

"வடக்கிலிருந்து தெற்கு காஸா நோக்கி நகரும் சூழல் இப்போது இல்லை என எவ்வளவோ நாங்க எடுத்துச் சொல்லியும் அவங்க கண்டுக்கல. இவ்ளோ ரத்த காயங்ளோட உயிருக்கு போராடிட்டு இருக்குற மனுஷங்கள இங்கிருந்து எடுத்துட்டு போறது மனிதத்தன்மையற்றது மட்டும் இல்ல, முடியாத காரியமும் கூட. அதனால தான் வெளியேற வேண்டாம்னு முடிவு பண்ணிட்டோம். இங்கு நிலைமை ரொம்ப மோசமா இருக்கு. காயம் பட்டவங்களுக்கு மக்கள் அவங்களாவே உணவ கொண்டு வந்து கொடுக்கறாங்க.

சிலர் தெற்குப் பக்கம் போனா, ரோட்டுலயே இஸ்ரேல் ராணுவம் கொன்னுடுமோன்னு பயந்து இங்கு வந்து இருக்காங்க. ஒரு மருத்துவரா, செவிலியரா நாங்க செய்றதுதான் சரி. எங்களால முடிஞ்ச வரைக்கும் காயம்பட்டவங்களை குணப்படுத்த போறோம். சாவுக்கும் வாழ்வுக்கும் இடைல நாங்க தான் இருக்கோம். எமெர்ஜென்ஸி வார்டோட நிலைமை ரொம்ப மோசமாயிருக்கு" என அல்ஜஸீராவுக்குப் பேட்டியளித்திருக்கிறார் அல் ஷொராஃபா.

பாலஸ்தீன அரசின் சுகாதாரத்துறை , சர்வதேச அமைப்புகளிடம் பலமுறை முறையிட்டும் இன்னும் எந்த தேசமும் மருத்துவ உதவிகளை அளிக்க முன்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.