உலகம்

தாய்லாந்து இளவரசிக்கு இதயத்துடிப்பில் சிக்கல்... பதற்றத்தை தணிக்க அரண்மனை கொடுத்த அறிக்கை!

தாய்லாந்து இளவரசிக்கு இதயத்துடிப்பில் சிக்கல்... பதற்றத்தை தணிக்க அரண்மனை கொடுத்த அறிக்கை!

webteam

தாய்லாந்தின் மன்னரான மஹா வஜிரலோங்கோர்னின் முதல் மனைவியின் ஒரே வாரிசான இளவரிசி பஜ்ரகிதியபா மஹிடோல் (44) கடந்த ஒரு வாரத்துக்கு முன் திடீரென மயங்கி விழுந்திருக்கிறார்.

தலைநகர் பாங்காக்கின் வடக்கே உள்ள நகோன் ராட்சசிமாவில் ராணுவ நாய் பயிற்சியின் போது இளவரசி பஜ்ரகிதியாபா மஹிடோல் மயங்கி விழுந்திருந்தார். இளவரசியின் உடல் நிலமை மோசமாக உள்ள நிலையில், அவர் பாங்காக்கிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார், அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்துவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் இன்று காலை அரண்மனை வெளியிட்ட அறிக்கையில், “இலவரிசியின் உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் தற்போதுவரை அவரது இதயம் துடிக்கும் செயல்முறையின் ஒரு பகுதி சரியாக இல்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தொடர்ந்து அவரது இதயத் துடிப்பை கண்காணிக்கவும் அவரது இதயம், நுரையீரல் மற்றும் சிறுநீரகம் ஆகியவற்றின் செயல்பாட்டை மேம்படுத்தவும் மருத்துவக் குழுவுக்கு அரசு சார்பில் மருத்துவம் மற்றும் உபகரணங்களை வழங்கியுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரண்மனையின் முறையான வாரிசு யார் என்பதை தாய்லாந்து அரசு இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை என்ற சூழலில், இளவரசியின் உடல்நலக்குறைவு அரசளவில் ஏதேனும் பாதிப்பையோ மாற்றங்களையோ எற்படுத்தும் என்று சொல்லப்படுகிறது. கடந்த சனிக்கிழமையன்று, மன்னர் வஜிரலோங்கோர்ன் மற்றும் அவரது மனைவி ராணி சுதிதா ஆகிய இருவருக்கும் லேசான கோவிட் அறிகுறிகள் தெரியவந்து பின் நேற்று பாதிப்பு உறுதியானதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

-சுஹைல் பாஷா