உலகம்

உருமாறிய புதிய கொரோனா... பிரிட்டன் மக்கள் மனநிலை என்ன? - விவரிக்கிறார் மருத்துவர் கண்மணி

உருமாறிய புதிய கொரோனா... பிரிட்டன் மக்கள் மனநிலை என்ன? - விவரிக்கிறார் மருத்துவர் கண்மணி

Sinekadhara

பிரிட்டனில் உருமாறிய புதிய கொரோனா வைரஸ் தீவிரமாகப் பரவ ஆரம்பித்துள்ளதால், அங்குள்ள மக்களின் மனநிலை குறித்தும், நிலவும் சூழல் குறித்தும் மருத்துவர் கண்மணி கண்ணன் விவரித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, ‘’கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டதால் டிசம்பர் மாதத் தொடக்கத்தில் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று அரசாங்கம் விழிப்புணர்வு பிரசாரங்களை நடத்தி வந்தது. கிறிஸ்துமஸை பயமின்றி நிம்மதியாகக் கொண்டாடலாம் என்று நினைத்த மக்களும் அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ள முன்வந்தனர்.

ஆனால், தற்போது உருவாகியுள்ள உருமாறிய புதிய கொரோனா வைரஸ் அதி தீவிரத்துடன் பரவுவதால், மக்கள் அதிக பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றனர். ஏனென்றால், இந்த நாட்டைப் பொறுத்தவரை பெரும்பாலான குடும்பங்களில் அனைவரும் தனித்தனியாக வாழ்வதால், கிறிஸ்துமஸ் காலத்தில்தான் ஒன்றுகூடி மகிழ்ச்சியாக கொண்டாடுவர். ஆனால், இந்த புதிய வைரஸ் தாக்கத்தால் தலைநகர் லண்டனில் tier 4 பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளதால் மக்கள் அதிக வருத்தத்தில் உள்ளனர். நீண்ட நாட்கள் பொதுமுடக்கத்திலிருந்து பழகிபோன சமயத்தில் தடுப்பூசி அறிவிப்பு வெளிவந்து அனைவரையும் உற்சாகப்படுத்தியது. மேலும், கிறிஸ்துமஸை முன்னிட்டு பிரிட்டன் அரசாங்கம் சில தளர்வுகளையும் அறிவித்திருந்தது. இந்த உருமாறிய புதிய கொரோனா, மக்களை வருத்தத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

முதன்முறை கொரோனா தாக்கம் ஏற்பட்டபோது மருத்துவமனைக்குள் வரவே மக்கள் பயப்பட்டனர். உடல்நலக் குறைவு ஏற்பட்டாலும் மருத்துவமனைக்கு வரவே ஒரு பயம் இருந்தது. மீண்டும் அதே நிலைக்கு தள்ளப்பட்டு விடுவார்களோ என்ற பயம் மருத்துவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. செப்டம்பர் மாதமே கொரோனா வைரஸில் மாற்றம் ஏற்படுவது கண்டறியப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். ஆனால், தற்போது அது திடீரென வீரியம் அடைந்து, அதிதீவிரமாக பரவுவதற்கான காரணம் ஏன் என்று இன்னும் கண்டறியப்படவில்லை. எங்கிருந்து பரவியது என்றும் தெரியவில்லை.

டிசம்பர் மாத ஆரம்பத்திலிருந்து கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 62% பேருக்கு இந்தப் புதிய வைரஸ்தான் தாக்கியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. எனவே, இங்கு முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இங்கிலாந்துக்கு பெரும்பாலும் உணவுப்பொருட்கள் ஐரோப்பா மற்றும் பிற நாடுகளிலிருந்துதான் வரும். மற்ற நாடுகள் போக்குவரத்து சேவையை நிறுத்திவிட்டதால் இங்கு தட்டுப்பாடு ஏற்படுமோ என்ற அச்சமும் மக்கள் மத்தியில் அதிகரித்திருக்கிறது’’ என்றார் மருத்துவர் கண்மணி கண்ணன்.