குர்பத்வந்த் சிங் பன்னுன் எக்ஸ் தளம்
உலகம்

”நவ. 1 to19 ஏர் இந்தியா விமானங்களில் யாரும் பயணிக்க வேண்டாம்" எச்சரிக்கைவிடுத்த காலிஸ்தான் தீவிரவாதி

”நவம்பர் 1 முதல் 19 வரை ஏர் இந்தியா விமானங்களில் யாரும் பயணிக்க வேண்டாம்” என காலிஸ்தான் அமைப்பின் தலைவர் குர்பத்வந்த் சிங் பன்னுன் தெரிவித்துள்ளார்.

Prakash J

விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படும் சம்பவங்கள் சமீபகாலமாக அதிகரித்து வருகின்றன. அந்த வகையில், கடந்த அக்டோபர் 14-ஆம் தேதிமுதல் இன்றுவரை 100க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. சோதனையில் பெரும்பாலானவை போலியானது என்றாலும் விமானச் சேவைகள் ஸ்தம்பிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதுபோன்ற வெடிகுண்டு மிரட்டல்கள் தொடர்ந்து வருவதை அடுத்து, சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம், அதுதொடர்பான அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திவருகிறது.

இந்த ஆலோசனையின்போது, சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) ஐந்தாண்டுகளுக்கு புரளி அழைப்பாளர்களை நோ-ஃப்ளை பட்டியலில் வைக்க வேண்டும் எனப் பரிந்துரைத்துள்ளது. அதுபோல், மேலும் வெடிகுண்டு மிரட்டல்களால் தங்களுக்கு ஏற்பட்ட இழப்பை குற்றம்சாட்டப்பட்டவர்களிடமிருந்து வசூலிக்க வேண்டும் என்று விமான நிறுவனங்கள் பரிந்துரைத்துள்ளன.

இதையும் படிக்க: ”அதிக குழந்தைகளைப் பெறுபவரே தேர்தலில் போட்டி” - சட்டத்தைக் கொண்டுவரும் முடிவில் ஆந்திர முதல்வர்!

இந்த நிலையில், அமெரிக்காவில் செயல்பட்டுவரும் காலிஸ்தான் அமைப்பின் தலைவர் குர்பத்வந்த் சிங் பன்னுன் இந்தியர்களுக்கு மிரட்டல் ஒன்றை விடுத்துள்ளார்.

”நவம்பர் 1ஆம் தேதி முதல் 19ஆம் தேதிவரை ஏர் இந்தியா விமானங்களில் பயணிக்க வேண்டாம்” என காலிஸ்தான் தீவிரவாதி குர்பத்வந்த் சிங் பன்னுன்எச்சரித்துள்ளார். இந்த நாட்களில் ஏர் இந்தியா விமானங்கள் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என அவர் மிரட்டல் விடுத்துள்ளார். நாடு முழுவதும் பல்வேறு விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வரும் சூழலில் பன்னுனின் பகிரங்க எச்சரிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஆண்டும் இதே போன்றதொரு மிரட்டலை பன்னுன் விடுத்திருந்தார். 1984இல் நடந்த சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தின் 40ஆம் ஆண்டு தினம் அனுசரிக்கப்பட உள்ளதையொட்டி இந்த மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் கனடாவின் இரட்டைக் குடியுரிமையைப் பெற்றுள்ள பன்னுன், தேசத் துரோகம் மற்றும் பிரிவினைவாதத்தின் அடிப்படையில் ஜூலை 2020 முதல் உள்துறை அமைச்சகத்தால் பன்னுன் பயங்கரவாதியாக வகைப்படுத்தப்பட்டுள்ளார்.

பன்னுன் மீதான கொலை முயற்சி வழக்கில் தற்போது அமெரிக்காவில் தேடப்பட்டு குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட இந்திய உளவுத்துறை முன்னாள் அதிகாரி விகாஷ் யாதவ் டெல்லியில் கைது செய்யப்பட்டு விசாரணை வளையத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: வேகம் காட்டும் இஸ்ரேல்| அழிக்கப்படும் தலைவர்கள்.. அடுத்த தலைவர் யார்? பட்டியல் ரெடி செய்த ஹமாஸ்!