தி கார்டியன் செய்தி நிறுவனத்தைத் தொடர்ந்து ஸ்பெயினைச் சேர்ந்த பிரபல நாளிதழும் எக்ஸ் தளத்தில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது.
200 ஆண்டுகள் பாரம்பரியமிக்க இங்கிலாந்தைச் சேர்ந்த ஆங்கில செய்தி நிறுவனமான தி கார்டியன் எக்ஸ் தளத்தில் பதிவுகளை வெளியிடப்போவதில்லை என தெரிவித்துள்ளது. அதாவது எக்ஸ் தளத்தில் இருந்து விலகுவதாக அறிவித்து இருந்தது.
அது தொடர்பானவ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதிகாரப்பூர்வமான கார்டியன் கணக்குகளில் இருந்து, சமூக ஊடக தளமான எக்ஸ் தளத்தில் பதிவுகளை வெளியிட மாட்டோம் என வாசகர்களுக்கு தெரியப்படுத்த விரும்புகிறோம். தீவிர வலதுசாரி கோட்பாடுகள், இனவெறி உள்ளிட்ட தொந்தரவு தரக்கூடிய உள்ளடக்கங்களை விளம்பரப்படுத்துவதும் X தளத்தில் காணப்படுகிறது. இது தொடர்பாக சமீப காலமாகவே நாங்கள் விவாதித்து வந்தோம். X என்பது ஒரு நச்சு ஊடக தளமாகும்” என்று தெரிவித்திருந்தது.
இந்தவகையில், தற்போது ஸ்பெயினைச் சேர்ந்த பிரபல நாளிதழான லா வாங்கார்டியாவும் எக்ஸ் தளத்தில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக லா வாங்கார்டியா நாளிதழ் தரப்பில் வெளியிடப்பட்ட விளக்கத்தில்,”எக்ஸ் தளத்தில் நச்சுக் கருத்துகள் அதிகமாகிவிட்டது. வதந்திகள், சதிக் கோட்பாடுகள் பரவும் இடமாக எக்ஸ் தளம் இருக்கிறது.” என்று தெரிவித்துள்ளது.
பார்சிலோனோவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் லா வாங்கார்டியா, ஸ்பெயினில் அதிகம் விற்பனையாகும் நாளிதழ்களில் ஒன்றான இது, இத்தகைய கருத்துக்களை தெரிவித்திருப்பது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக, சிஎன்என் முன்னாள் தொகுப்பாளர் டான் லெமன்-ம் எக்ஸ் தளத்தில் இருந்துவிலகுவதாக தெரிவித்து இருந்தார். அவர், “இந்த தளம் நேர்மையான விவாதம் மற்றும் உரையாடலுக்கும், வெளிப்படைத் தன்மைக்கும், பேச்சு சுதந்திரத்திற்குமான இடம் என நம்பினேன். ஆனால், அந்த நோக்கத்திற்கு இப்போது உதவவில்லை என்பதுபோல உணர்கிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.