2019 இறுதியில், முதலில் சீனாவில் கண்டறியப்பட்டதாக சொல்லப்பட்ட கொரோனா வைரஸ், பின்னர் உலகம் முழுவதும் பரவி, லட்சக்கணக்கான உயிர்களைக் கொன்று குவித்தது. இதனால் ஊரடங்குத் தடைகள் பிறப்பிக்கப்பட்டன. மக்கள் வெளியே வராமல் வீட்டுக்குள்ளேயே முடங்கினர். அவர்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியது. கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் முதல் அலை, 2வது அலை, 3வது அலை என பரவிய கொரோனாவால், உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர்.
லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். உலகப் பொருளாதாரமும் முடங்கியது. பின்னர், இந்த வைரஸுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, உயிரிழப்புகள் குறையத் தொடங்கின. மேலும், கொரோனா எனும் கோரப்பிடியில் இருந்தும் மக்கள் விலக ஆரம்பித்து, தற்போது ஓரளவுக்கு நிமிர்ந்து நடைபோட்டு வருகின்றனர். என்றாலும், இன்னும் உலகம் முழுவதும் சில கொரோனா வைரஸ் திரிபுகள் மனிதர்களிடையே பரவி வருகிறது.
இந்த நிலையில், கொரோனாவைவிட கொடிய தொற்று தாக்கும் அபாயம் உள்ளதாக உலக சுகாதார அமைப்பு (WHO) எச்சரிக்கை விடுத்துள்ளது. அடுத்த நோய்த் தொற்று, Disease 'X' என்று கண்டறியப்பட்டுள்ளதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். உலக சுகாதார அமைப்பு (WHO) தனது இணையதளத்தில் ’முன்னுரிமை நோய்கள்’ பட்டியலில் Disease Xஐச் சேர்த்துள்ளது. அவ்வமைப்பு, கோவிட்-19, எபோலா, லாசா காய்ச்சல், மத்திய கிழக்கு சுவாச நோய்க்குறி (Middle East respiratory syndrome, MERS), நிபா மற்றும் ஜிகா ஆகியவற்றுடன் Disease 'X' நோயையும் வகைப்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், ”Disease 'X' நோய், கோவிட் -19ஐவிட ஆபத்தான மற்றொரு தொற்றுநோயை ஏற்படுத்தும்” என இங்கிலாந்தின் தடுப்பூசி பணிக்குழுவின் தலைவரான டேம் கேட் பிங்காம் கூறியுள்ளார். ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளார். அதில், ‘WHO தரவுகளின்படி, 2019இல் தோன்றிய கோவிட் தொற்று, ஏற்கெனவே உலகளவில் ஏறக்குறைய ஏழு மில்லியன் மக்களின் உயிரைக் கொன்றுள்ளது. அடுத்த தொற்றுநோய் ஏற்கெனவே இருக்கும் வைரஸிலிருந்து தோன்றக்கூடும். இந்த புதிய வைரஸ் 1918-1920இல் பேரழிவு ஏற்படுத்திய ஸ்பானிஷ் காய்ச்சலுக்கு ஒத்த தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். ஸ்பானிஷ் ஃப்ளூ காய்ச்சல் காரணமாக அப்போது சுமார் 5 கோடி பேர் உயிரிழந்தனர். வரவிருக்கும் இந்த தொற்றுநோய் கொரோனாவுக்கு இணையான பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பிருக்கிறது. அதன் பாதிப்பால் 50 மில்லியன் மக்கள் வரை உயிரிழக்க வாய்ப்பிருக்கிறது.
இன்று, ஏற்கெனவே இருக்கும் பல வைரஸ்களில் ஒன்றிலிருந்து இதேபோன்ற இறப்பு எண்ணிக்கையை நாம் எதிர்பார்க்கலாம். இன்று, அதிக வைரஸ்கள் வேகமாக பிரதிபலிக்கின்றன மற்றும் உருமாற்றம் அடைகின்றன. விஞ்ஞானிகள் 25 வைரஸ் குடும்பங்களை கண்காணித்து வருகின்றனர்.
இதில் ஒவ்வொரு பிரிவிலும் ஆயிரக்கணக்கான தனிப்பட்ட வைரஸ்கள் இருக்கின்றன. இவற்றில் ஏதாவது ஒன்று உருமாறினாலும் அது பெருந்தொற்றாக மாறும் வாய்ப்புகள் அதிகம். விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு வைரஸ் பரவும்போது பாதிப்பு மிக மோசமாக இருக்கும். இப்படியெல்லாம் ஏற்படுமா எனக் கேட்காதீர்கள். நிச்சயம் ஏற்படும். இந்தச் சூழலைச் சமாளிக்க வேண்டுமானால், உலக நாடுகள் தற்போதிலிருந்தே தடுப்பூசிகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.