நமக்கு மொழியளவிலும், கலாசார அளவிலும், வாழ்க்கைமுறை அடிப்படையிலும் தொடர்பற்றுக் கிடக்கிற தேசங்களின் படைப்புகளை புரிந்துகொள்வதற்கு முன்பாக அத்தேசம் பற்றி சில சிறு தகவல்களையேனும் நாம் தெரிந்து கொள்வது அவசியமாகிறது. எத்தியோப்பியாவில் தடைசெய்யப்பட்ட திரைப்படம் “DIFRET (2014)”, இத்திரைப்படத்தை புரிந்து கொள்வதற்கு முன் கொஞ்சம் எத்தியோப்பியா வரை சென்று வருவோம்.
வடகிழக்கு ஆப்ரிக்க பகுதியில் அமைந்துள்ள இந்நாடு 50 சதவிகித கல்வி அறிவை கூட இன்னும் எட்டவில்லை என்கிறது ஓர் ஆய்வறிக்கை. சூடான், எரித்ரியா, ஜிபோடி, சோமாலியா, கென்யா ஆகிய நாடுகளுக்கு மத்தியில் அமைந்துள்ள எத்தியோப்பியாவில் ”அம்ஹாரிக், ஓரோமிக்னா, திக்ரிக்னா” ஆகிய மொழிகள் பேசப்படுகின்றன. 2000 ஆண்டுகளுக்கு முன் செமிட்டி மொழி பேசிவந்த இந்நிலம் ஆப்ரிக்காவின் மிகப் பழைமையான நாடாகும்.
குடும்ப வன்முறை, கட்டாய திருமணங்கள், பெண்ணுறுப்பை சிதைக்கும் தண்டனை, பெண் பிள்ளைகளுக்கு கல்வி மறுப்பு போன்ற மோசமான விசயங்களை தங்கள் பாரம்பரிய வழக்கம் என இன்றளவும் நம்பிக் கொண்டிருக்கும் ஒரு சமூகத்தையும் சேர்த்தே உள்ளடக்கி இயங்குகின்றன எத்தியோப்பிய கிராமங்கள்.
ஒரு சர்ச்சைக்குரிய வழக்கினை நிஜத்தின் பின்னணியில் அம்ஹாரிக் மொழியில் பேசுகிறது “DIFRET”. 90’களில் நடப்பதாக காட்சிபடுத்தப் பட்டிருக்கும் இந்த உண்மைக் கதை, எத்தியோப்பியாவில் பழமைவாதிகள் நிறைந்த ஓர் கிராமத்தின் விந்தையான பழக்கம் பற்றியும் அதனால் பெண்களுக்கு விளையும் அநீதி பற்றியும் பேசுகிறது.
எத்தியோப்பியா’வின் தலைநகரான ’அடிஸ் அபாபா’-வில் இருந்து மூன்று மணிநேர பயண தூரத்திலிருக்கும் கிராம பள்ளியில் ஹிரூட் என்ற 14 வயது சிறுமி படிக்கிறாள். ஒரு நாள் பள்ளிக் கூடத்திலிருந்து வீடு திரும்பும் ஹிரூட் குதிரையில் வந்த அவ்வூர் இளைஞர்கள் சிலரால் கடத்தப்பட்டு ஒரு குடிசைக்குள் சிறை வைக்கப்படுகிறாள். அக் குழுவின் தலைவனால் சிறுமி ஹிரூட் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப் படுகிறாள். அவர்களின் கிராம வழக்கப்படி, இச்செயல் ஒரு ஆண்., தான் விரும்பும் பெண்ணை மணக்க தகுதியான ஒன்றாக பார்க்கப்படுகிறது. அப்பெண் தன்னை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியவரையே மணக்க வேண்டும்.
ஒரு சமயத்தில் அக்குடிசையில் இருந்து மெல்ல தப்பிக்க நினைக்கும் சிறுமி ஹிரூட் அங்கிருந்த ஒரு வேட்டை துப்பாக்கியையும் தன்னோடு எடுத்துச் செல்கிறாள். அவளைத் துரத்தும் அக்குழுத் தலைவனை பயத்தால் அவள் சுட்டுவிட அவன் சம்பவம் நடந்த வனத்திலேயே மடிகிறான்.
ஹிரூட் தாக்கப்படுகிறாள். கிராம பஞ்சாயத்து கூடுகிறது. பெண்பிள்ளை பள்ளிக்கு போனதால் தான் இப்படியெல்லாம் நடந்தது என பலரும் தங்கள் வாதங்களை வைக்கிறார்கள். சிறுமிக்கு மரணதண்டனை வழங்குவதே சரியான தீர்ப்பு என்றும் கூறுகிறார்கள். சிலர் ஒரு படி மேலே போய் பள்ளி ஆசிரியரை கடிந்து கொள்கிறார்கள்.
இந்நிலையில் ஹிரூட் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்படுகிறாள். விபரம் அறிந்து அவளுக்கு உதவ Meaza Ashenafi என்ற பெண் வழக்கறிஞர் நகரத்திலிருந்து வருகிறார். அவள் Ethiopian Women Lawyers Association (EWLA) என்ற அமைப்பின் மூலம் பெண்களின் உரிமைகளுக்காக உழைக்கும் ஒரு இளம் பெண் வழக்கறிஞர். இப்படத்தில் Meaza's Ashenafi கதாபாத்திரத்தை ஏற்று உழைத்திருக்கும் நடிகை Meron Getnet இவள் எத்தியோப்பியாவின் எவர் ப்ளாக் ஏஞ்சல்.
”ஹிரூட் தன்னை தற்காத்துக் கொள்ளவே துப்பாக்கியை பயன்படுத்தினாள் எனவே இது கொலையாகாது அவள் சிறுமி எனவே அவளை விடுதலை செய்வதே சரி”. என Meaza Ashenafi தன் தரப்பு வாதத்தை முன் வைக்கிறாள். ஆனால் ஆண்களுக்கான சமூகமாக மாறியிருக்கும் அங்கு பெரும் போராட்டத்துக்கு பின்னரே நீதிமன்றத்தில் அவளது வாதம் எடுபடுகிறது. இறுதியில் சிறுமி ஹிரூட் விடுவிக்கப்படுகிறாள். ஆனால் அவள் தனது கிராமத்துக்கு சென்று மீண்டும் தன் குடும்பத்தோடு சேர்ந்து வாழ வாய்ப்பில்லை. அது அவள் உயிருக்கு பாதுகாப்பானதும் அல்ல என்ற பிரிவின் வேதனையும் பதிவாகிறது.
காட்சியொன்றில் பாதுகாப்பு காரணங்களுக்காக சிறுமி ஹிரூட் Meaza’வின் வீட்டில் தங்க வைக்கப்படுகிறாள். Meaza வீட்டில் இல்லாத சமயம் மேஜையில் இருந்த தொலைபேசி மணி ஒலிக்கிறது. பதறிப்போன ஹிரூட் ஒரு வலைக்குள் சிக்கிக் கொண்ட எலியைப் போல துடித்துப் போய் அறையில் அங்குமிங்கும் அலறி ஓடுகிறாள். தன் கண்களை சுருக்கி காதுகளை இறுக மூடிக் கொள்கிறாள்.
உண்மையில் அவளுக்கு முதன் முதலின் தொலை பேசி அறிமுகமானது காவல் நிலையத்தில் தான்.
இக்காட்சியின் தொடர்ச்சியாக ஹிரூட் சிறைபிடிக்கப்பட்டிருந்த காவல் நிலையத்தின் தொலைபேசி மணி ஒலிப்பதையும் அதை தொடர்ந்து காவலர் ஒருவர் ஹிரூட்டை தாக்குவதையும் கோர்வையாக சித்திரப்படுத்தி இருக்கும் விதத்தில் இயக்குநர் Zeresenay Mehari ஹிரூட்டுக்குள் பதட்டத்தையும் பார்வையாளனுக்கு தலைகுனிவையும் ஏற்படுத்திவிடுகிறார்.
99 நிமிடங்கள் ஓடக் கூடிய ”DIFRET” சூடான் மற்றும் பெர்லின் திரைப்பட விழாக்கள் உட்பட பல்வேறு சர்வதேச திரைப்படவிழாக்களில் விருது பெற்றது.
இக் கதையின் நிஜ நாயகியான Meaza’s 1995 முதல் 2002 வரையிலான கால கட்டத்துக்குள் 30,000 பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு நீதி கிடைக்க வழி செய்துள்ளார். 2003-ஆம் வருடம் Meaza's –விற்கு African Nobel Laureate விருதும் வழங்கப்பட்டது. அவர் இன்றும் தொடர்ந்து உழைத்துக் கொண்டிருக்கிறார்.
உலகம் என்பது நம் வீட்டின் வரவேற்பறையில் துவங்கி நாம் வேலை செய்யும் அலுவலக இருக்கையோடு முடிகிற ஒன்றல்ல. இவ்வுலகிற்கு இன்னுமொரு பக்கமுண்டு அந்த பக்கம் முழுக்க ஹிரூட்’களின் கதைகளுண்டு. ஹிரூட்’களின் விடுதலைக்காக நாம் அப்பக்கத்தை புரட்டியே ஆக வேண்டும்.