உலகம்

ஷூ அணியக்கூட நேரமில்லை; அவ்வளவு பணத்தை எப்படி கொண்டு போவேன்? - அஷ்ரப் கனி

ஷூ அணியக்கூட நேரமில்லை; அவ்வளவு பணத்தை எப்படி கொண்டு போவேன்? - அஷ்ரப் கனி

JustinDurai
மீண்டும் ஆப்கானிஸ்தான் திரும்புவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளார் அஷ்ரப் கனி.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று தலிபான்கள் கைப்பற்றினர். அதற்கு முன்னதாக அதிபராக இருந்த அஷ்ரப் கனி நாட்டைவிட்டு வெளியேறினார். அவர் அங்கிருந்து ராணுவ ஹெலிகாப்டரில் தஜிகிஸ்தான் தப்பிச் சென்றதாகக் கூறப்பட்டது. ஆனால், அவர் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் இருப்பது உறுதியாகியுள்ளது. அஷ்ரப் கனிக்கும் அவரது குடும்பத்தாருக்கும் மனிதாபிமான அடிப்படையில் தங்கள் நாட்டில் நுழைய அனுமதி கொடுத்ததாக ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்துள்ளது.
முன்னதாக அஷ்ரப் கனி நாட்டை விட்டு வெளியேறிய போது ஹெலிகாப்டரில் கார்களுடன் அதில் நிறைய பணத்துடன் தப்பியதாக ரஷ்யா குற்றஞ்சாட்டியிருந்தது. மேலும் நாட்டு மக்கள் தலிபான்களின் பிடியில் சிக்கியிருந்த போது அதிபர் நாட்டைவிட்டு தப்பியோடியது அதிர்ச்சிக்கும் விமர்சனத்திற்கும் உள்ளானது. இச்சூழலில் நாட்டைவிட்டு வெளியேறியதை குறித்து மவுனத்தை கலைத்த அஷ்ரப் கனி, நேற்று தனது ஃபேஸ்புக் பக்கம் மூலமாக வீடியோவில் தோன்றி பேசினார்.
அந்த வீடியோவில் அஷ்ரப் கனி கூறுகையில், ''தலிபான்களால் ஏற்படும் ரத்தக்களறியை தவிர்க்கவே நான் அங்கிருந்து தப்பி தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் குடிபெயர்ந்துள்ளேன். நான் காபூலிலேயே இருந்திருந்தால் நிச்சயம் வன்முறை வெடித்திருக்கும். தலிபான்களுக்கு எதிராக போராடிய ஆப்கான் படைகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தலிபான்களை உள்ளடக்கிய அரசாங்கத்தை உருவாக்குவது தொடர்பாக கலந்து ஆலோசிக்க நான் எண்ணினேன்.
எனது காலனிகளை அணிய கூட எனக்கு நேரம் இல்லாத நிலையில், நான் எப்படி அவ்வளவு பணத்தை கொண்டு வருவேன். எனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக எனது பாதுகாப்பு அதிகாரிகள் எனக்கு அறிவுறுத்தி உடனே வெளியேறுமாறு ஆலோசனை வழங்கினர். அதன் பேரில்தான் நான் வெளியேறினேன். அரசின் முன்னாள் அதிகாரிகள் மற்றும் தலிபான்கள் இடையேயான பேச்சுவார்த்தைக்கு நான் ஆதரவு அளிக்கிறேன். நான் மீண்டும் ஆப்கானிஸ்தான் திரும்புவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறேன்'' என்றார் அஷ்ரப் கனி.