கமலா ஹாரிஸ் pt web
உலகம்

“அது கம்மல் இல்லைங்க.. NOVA H1 ஆடியோ இயர் ரிங்..” கமலா ஹாரிஸ் அணிந்திருந்தது காதணியா? ஹெட்போனா?

தேர்தல் பரப்புரைகளின்போது, அரசியல் தலைவர்கள் மீது விமர்சனங்களும் குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்படுவது வழக்கம்தான். அப்படி அதிபர் தேர்தலை சந்தித்துள்ள அமெரிக்காவில், இப்போது சர்ச்சைகள் திரும்பியிருப்பது கமலா ஹாரிஸ் மீது...

PT WEB

அதிபர் வேட்பாளர்களின் நேரடி விவாதம்

வல்லரசு நாடாக திகழும் அமெரிக்காவில், ஆட்சி அரியணையில் அமர்வது யார் என்பதை தேர்ந்தெடுப்பதற்கான அதிபர் தேர்தல், நவம்பர் மாதம் நடைபெறுகிறது. தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸ், ஜனநாயகக் கட்சி வேட்பாளராகவும், முன்னாள் அதிபரான ட்ரம்ப் குடியரசுக் கட்சி வேட்பாளராகவும் களத்தில் உள்ளனர்.

அந்நாட்டு தேர்தல் மரபுப்படி, வேட்பாளர்கள் ஒரே மேடையில் தோன்றி, நேருக்கு நேர் விவாதிக்கும் நிகழ்ச்சி இந்திய நேரப்படி கடந்த புதன்கிழமை (நேற்று முன்தினமான செப் 11) காலை நடைபெற்றது. இந்த விவாத மேடையில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ், மிகுந்த சாமர்த்தியமாக கேள்விகளை எதிர்கொண்டு, துணிச்சலான துல்லியமான பதில்களை அளித்து, பார்வையாளர்களை கவர்ந்தார். அதே நேரத்தில், கமலா ஹாரிஸ் அணிந்திருந்த முத்துக் கம்மல், பலரையும் ஈர்த்தது. ஆனால், அது முத்துக்கம்மல் அல்ல, ஹெட்ஃபோன் என்று, ட்ரம்ப்பின் ஆதரவாளர்கள் புகார் எழுப்பி உள்ளனர்.

”அது கம்மலாக இருக்கும் ஹெட்போன்” ட்ரம்ப் ஆதராவாளர்கள்

'NOVA H1' ஆடியோ இயர் ரிங்க் என்ற காதணி, கம்மலாகவும் இருக்கும் ஹெட்ஃபோனாகவும் செயல்படும். அந்த ஆடியோ இயர் ரிங்கைத்தான், ட்ரம்ப் உடனான விவாதத்தின்போது கமலா ஹாரிஸ் அணிந்திருந்தார் என்பது ட்ரம்ப்பின் ஆதரவாளர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டு. அந்த சாதனத்தின் மூலம் வெளியில் இருந்து யாரோ உதவியதன் மூலம் விவாதங்களை கையாண்டு ஸ்கோர் செய்திருப்பதாக குற்றம்சாட்டுகிறார்கள்.

வசூல் ராஜா எம்.பி.பி.எஸ். திரைப்படத்தில், ஹெட்ஃபோனை வைத்து கேள்விக்கு பதிலை கேட்டு தேர்வெழுதும், கமல்ஹாசன் போல, கமலா ஹாரிஸ் முறைகேடு செய்ததாக பொங்குகிறார்கள்.

ட்ரம்ப் ஆதரவாளர்களின் குற்றச்சாட்டுக்கு, கமலா ஹாரிஸின் ஆதரவாளர்கள் பதிலடி கொடுத்துள்ளனர். அதாவது, “டிஃபனி ஹார்ட்வேர் இயர் ரிங்ஸ்-தான் (Tiffany HardWear Pearl Earrings), கமலா அணிந்திருந்தார்” என்பது அவர்களின் விளக்கம். இதன் மாடல் 'NOVA H1' ஆடியோ இயர் ரிங்குடன் அதிகம் ஒத்துப் போவதால், ட்ரம்ப் ஆதரவாளர்கள் குழம்பியிருப்பதாக கூறுகிறார்கள் அவர்கள்.

'NOVA H1' ஆடியோ இயர் ரிங்க்கில் ஒரு தண்டுதான் இருக்கும், கமலா அணிந்திருந்ததில் 2 தண்டுகள் இருந்தன என விளக்குகிறார்கள் அவரது ஆதரவாளர்கள். இந்த விளக்கத்துடன், கம்மல் சர்ச்சை முடிவுக்கு வந்த நிலையில், கமலா அணிந்திருந்த முத்துக்கம்மல் குறித்து, சுவாரஸ்யமான தகவலும் வெளியாகியுள்ளது.

AKA அமைப்பினர் அணியும் அணிகலன்

Alpha Kappa Alpha என்ற ஆப்பிரிக்க - அமெரிக்க மாணவர் அமைப்பின் பெண்கள் பிரிவில் கமலா அங்கம் வகிக்கிறார். அமெரிக்கா, ஆப்பிரிக்கா மட்டுமின்றி, உலகம் முழுவதும் 3 லட்சத்து 60 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இதில் உறுப்பினராக உள்ளனர். இவர்களில் பலர் அரசியல் தலைவர்களாகவும், விஞ்ஞானிகளாகவும் இலக்கியத்தில் பேராளுமைகளாகவும் திகழ்கின்றனர். AKA எனப்படும் இந்த அமைப்பின் அங்கத்தினர், தங்களின் அடையாளமாக முத்து அணிகலன்களை அணிவதுண்டு. ஆப்பிள் பச்சை, சால்மன் பிங்க் ஆகிய வண்ணங்களும் இதன் அடையாளங்களாக திகழ்கிறது. AKA அமைப்பின் கூட்டங்களில், தொடர்ந்து பங்கேற்று வரும் கமலா ஹாரிஸ், விவாதத்தின்போது முத்துக்கம்மலை அணிந்திருக்கிறார். பல்வேறு கூட்டங்களில் ஆப்பிள் பச்சை, சால்மன் பிங்க் வண்ணங்களில் உடையணிவதையும் பார்க்கலாம்.