உலகம்

சுற்றுச்சூழல் மேம்பாடு: வளர்ந்த நாடுகள் வாக்குறுதியளித்த நிதி எங்கே?-வளரும் நாடுகள் கேள்வி

சுற்றுச்சூழல் மேம்பாடு: வளர்ந்த நாடுகள் வாக்குறுதியளித்த நிதி எங்கே?-வளரும் நாடுகள் கேள்வி

PT
சுற்றுச்சூழல் சீர்கெடுவதை தடுக்க 100 பில்லியன் அமெரிக்க டாலர் நிதி உதவி அளிப்பதாக 2008 ஆம் வருடத்தில் அமெரிக்கா உள்ளிட்ட வளர்ச்சி அடைந்த நாடுகள்  உத்தரவாதம் அளித்திருந்த நிலையில், இதுவரை இந்த முக்கிய வாக்குறுதியை நடைமுறைப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகள் புகார் அளித்து வருகின்றன.
அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் ஜப்பான் போன்ற வளர்ந்த நாடுகள் அதிக அளவில் இயற்கை வளங்களை சுரண்டியதால்தான் காலநிலை மாற்றம் என்னும் இயற்கை சீற்றத்தை நாம் சந்திக்கிறோம் என அதிக ஜனத்தொகையை கொண்ட, வளரும் நாடுகள் வலியுறுத்தியது. வளர்ந்த நாடுகளில் ஜனத்தொகை குறைவு என்றாலும், உணவு, பெட்ரோல், இயற்கை எரிவாயு, கனிம வளங்கள் ஆகியவை அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால் சுற்றுச்சூழல் மாசு மற்றும் காலநிலை மாற்றம் ஆகிய கடும் பாதிப்புகள் உலகம் முழுவதிலும் பேரழிவை உண்டாக்கி வருகின்றன.
வளரும் நாடுகள் அதிக ஜனத்தொகையை கொண்டிருந்தாலும், வளர்ந்த நாடுகளை விட குறைந்த அளவிலேயே இயற்கை வளங்களை பயன்படுத்துகின்றன. ஆகவே வளர்ந்த நாடுகள் காலநிலை மாற்றத்துக்கு பொறுப்பேற்று 100 பில்லியன் டாலர் பங்களிப்பை அளிக்க வேண்டும் என வளரும் நாடுகள் வலியுறுத்தி சர்வதேச சுற்றுச்சூழல் மாநாட்டில் 2008 ஆம் வருடத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
இந்த 100 பில்லியன் டாலர் நிதி சுற்றுச்சூழல் மாசு அதிகரிப்பதை தடுக்கும் பசுமை தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்த பயன்படுத்தப்படும் என்பது நீண்ட பேச்சு வார்த்தைக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு. ஆனால் இதுவரை இந்த நிதி மானியமாக அளிக்கப்படுமா அல்லது சலுகை வட்டிக்கடனாக அளிக்கப்படுமா போன்ற எந்த விவரமும் இதுவரை முடிவு செய்யப்படவில்லை. இந்தியா உள்ளிட்ட நாடுகள் தங்களுடைய சொந்த நிதி அடிப்படையில் சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் தயாரிப்பது போன்ற முக்கிய நடவடிக்கைகளுக்கான முதலீடுகளை செய்து வருகின்றன.
காற்றாலை மூலம் மின்சார உற்பத்தி, பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுப்பது, சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்தாத வாகன தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவது, CFC போன்ற ரசாயனங்களின் பயன்பாட்டை தடுப்பது, மின்சாரத்தை அதிகம் பயன்படுத்தாத எல்இடி விளக்குகளை அறிமுகப்படுத்துவது, மின் சாதனங்களில் மின்சார பயன்பாட்டை குறைப்பது போன்ற நடவடிக்கைகளை இந்தியா உள்ளிட்ட நாடுகள் தங்களுடைய சொந்த செலவிலேயே செய்து வருகின்றன. உலக வங்கி போன்ற சில சர்வதேச அமைப்புகள் இதற்காக சலுகை வட்டியில் கடன் அளித்து வருகின்றன.
ஆனால் வளர்ந்த நாடுகள் 2008 ஆம் வருடத்தில் உறுதி அளித்த 100 பில்லியன் அமெரிக்க டாலரில், ஏற்கனவே 70% செலவிடப்பட்டு விட்டதாக பேசி வருகின்றன. இது முற்றிலும் தவறு என்பது வளரும் நாடுகளின் வாதம் ஆகும். சுற்றுச்சூழல் விவகாரத்தில் நிதி உதவி என்றால் என்ன என்பதே முடிவு செய்யப்படாமல் உள்ள நிலையில், தங்கள் வாக்குறுதியில் பெரும் பகுதியை நிறைவேற்றி உள்ளதாக வளர்ந்த நாடுகள் எப்படி சொல்ல முடியும் என எகிப்து நாட்டில் நடைபெற உள்ள COP27 மகாநாட்டில் இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகள் கேள்வி எழுப்ப உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சுற்றுச்சூழலுக்கு பெரும் சேதம் விளைவித்த வளர்ந்த நாடுகள், தங்கள் பொறுப்பை உணர்ந்து அதிக நிதி உதவி அளிக்க வேண்டும் என்பதே வளரும் நாடுகளின் கோரிக்கை.
இன்னொரு முக்கிய முரண்பாடு சுற்றுச்சூழலை பாதிக்கும் நிலக்கரி மற்றும் பெட்ரோலிய பொருட்கள் போன்றவற்றின் பயன்பாட்டை குறைப்பது தொடர்பானதாகும். பொறுப்பற்ற வகையில் இத்தகைய எரிபொருட்களை பயன்படுத்தியும், கனிம வளங்களை சுரண்டியும் தங்களுடைய உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றை முன்னேற்றிக் கொண்ட வளர்ந்த நாடுகள், காலநிலை மாற்ற பிரச்னை என்று வந்தவுடன் வளரும் நாடுகள் தங்களுடைய எரிபொருள் பயன்பாடு, கனிம வளங்களின் பயன்பாடு, விவசாய முறைகள், பிளாஸ்டிக் பயன்பாடு மற்றும் ரசாயனங்களின் பயன்பாடு ஆகியவற்றை அதிவேகமாக குறைக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன.
அதிவேகமாக இயற்கை வளங்களை பயன்படுத்துவதை வளர்ந்த நாடுகளே குறைக்க வேண்டும் என்றும், பட்டினியை போக்குவது மற்றும் வறுமையை ஒழிப்பது போன்ற பல்வேறு கடமைகள் உள்ள வளர்ந்த நாடுகள் இத்தகைய கட்டாயத்துக்கு தள்ளப்படக்கூடாது எனவும், இந்தியா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. சீனா மற்றும் இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகளில் உலகின் பெரும் பங்கு ஏழைகளின் ஜனத்தொகை வசித்து வருகிறது எனவும், கடுமையான கட்டுப்பாடுகள் வளர்ந்த நாடுகளுக்கே விதிக்க வேண்டும் எனவும் வளரும் நாடுகள் எகிப்து நாட்டில் நடைபெறும் 27 வது சர்வதேச மகாநாட்டில் வலியுறுத்த உள்ளன. இந்த இரண்டு முரண்பாடுகளும் பல வருடங்களாக சர்ச்சையாக தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
- கணபதி சுப்ரமணியம்