தாக்குதலுக்கு உள்ளான அமெரிக்க அதிபர்கள் முகநூல்
உலகம்

அமெரிக்க அரசியல் தலைவர்கள் மீதான தாக்குதல்கள்: வரலாற்றின் கருப்பு பக்கங்கள் ஓர் பார்வை!

PT WEB

வன்முறை மூலமே விடுதலை பெற்ற அமெரிக்காவில் அரசியல் தலைவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவது இது முதல்முறை அல்ல. அமெரிக்கா அதிபர்கள் 4 பேர் வன்முறை சம்பவங்களில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்பது அதிர்ச்சி அளிக்கும் தகவலே. இவர்களன்றி இன்னும் பல தலைவர்கள் பதவியில் இல்லாதபோது தாக்குதலுக்கு உள்ளாகி இறந்துள்ளனர். சிலர் உயிர்தப்பியும் உள்ளனர். இந்த தலைவர்களெல்லாம் யார் யார்? பிழைத்தவர்கள் எத்தனை பேர்? பார்க்கலாம்...

ஆபிரகாம் லிங்கன்

ஆபிரகாம் லிங்கன்

1865ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி அமெரிக்காவின் 16ஆவது அதிபரான ஆபிரகாம் லிங்கன் நாடக அரங்கில் துப்பாக்கி குண்டுக்கு இரையானார். ஜான் வில்கீஸ் பூத் (John Wilkes Boot)) என்பவரே இந்த படுகொலையை அரங்கேற்றினார். இதுதான் உயர் பதவியில் இருப்பவர்கள் வன்முறைக்கு பலியானதற்கான தொடக்கப் புள்ளி.

ஜேம்ஸ் ஏ. கார்பீல்ட்

ஜேம்ஸ் ஏ. கார்பீல்ட்

இதனைத் தொடர்ந்து அமெரிக்காவின் 20ஆவது அதிபராக இருந்த ஜேம்ஸ் ஏ. கார்பீல்ட் (JAMES GARFIELD) 1881 ஆம் ஆண்டு ஜூலை 2 ஆம் தேதி வாஷிங்டனில் உள்ள ரயில் நிலையத்தில் சார்லஸ் என்பவரால் சுடப்பட்டார். பல நாட்கள் மருத்துவ சிகிச்சையில் இருந்த கார்பீல்ட் செப்டம்பர் மாதம் உயிரிழந்தார்.

வில்லியம் மெக்கின்லி

WILLIAM McKINLEY

அமெரிக்காவின் 25ஆவது அதிபராக இருந்த வில்லியம் மெக்கின்லியும் (WILLIAM McKINLEY) 1901 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 6 ஆம் தேதி நியூயார்க் நகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் வைத்து சுடப்பட்டார். எனினும் 8 நாட்கள் கழித்து அவர் உயிரிழந்தார்.

ஃபிராங்க்ளின் டி. ரூஸ்வெல்ட் - ஆண்டன் செர்மாக்

Franklin D. Roosevelt

அமெரிக்காவின் 32 ஆவது அதிபராக பதவியேற்ற ஃபிராங்க்ளின் டி. ரூஸ்வெல்ட் மீது 1933 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. எனினும் இதில் அவர் நூலிழையில் உயிர்தப்பிய சூழலில், சிகாகோ நகர மேயராக இருந்த ஆண்டன் செர்மாக் (Anton Cermak) குண்டு அடிப்பட்டு உயிரிழந்தார்.

ஹாரி எஸ். ட்ரூமென்

Harry S Truman

ரூஸ்வெல்ட் போன்றே 1950 ஆம் ஆண்டு 33ஆவது அதிபராக இருந்த ஹாரி எஸ். ட்ரூமென் (HARRY S. TRUMAN) மீது வெள்ளை மாளிகைக்குள் வைத்து துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. எனினும் அவர் இந்த தாக்குதலில் உயிர் தப்பினார்.

ஜான் எப் கென்னடி

JOHN F KENNEDY

அமெரிக்காவின் 35ஆவது அதிபரான ஜான் எப் கென்னடி(JOHN F KENNEDY) 1963 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் டல்லாஸ் நகரில் வைத்து படுகொலை செய்யப்பட்டார். கென்னடியை சுட்டுக் கொன்ற ஆஸ்வெல்ட் என்பவரும் அதே பாணியில் சுட்டுக் கொல்லப்பட்டது வரலாற்று சம்பவம்.

ஜெரால்ட் ஃபோர்டு

GERALD FORD

1975 ஆம் ஆண்டு 38ஆவது அதிபராக இருந்த ஜெரால்ட் ஃபோர்டு (GERALD FORD) மீது இருமுறை கொலை முயற்சி தாக்குதல் நடத்தப்பட்டது. ஆனால் அவர் இரண்டு தாக்குதலில் இருந்தும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

ரொனால்ட் ரீகன்

ரொனால்ட் ரீகன்

40ஆவது அதிபரான ரொனால்ட் ரீகன் ((RONALD REAGAN)) 1981ஆம் ஆண்டு மார்ச் மாதம் வாசிங்டன் நகரில் வைத்து அடையாளம் தெரியாத கும்பலால் சுடப்பட்டார். இதில் ரீகன் உயிர் தப்பினாலும் அரசின் மூத்த அதிகாரிகள் மூவர் கொல்லப்பட்டனர்.

ஜார்ஜ் டபிள்யூ புஷ்

GEORGE W. BUSH

அதிரடிக்கு பெயர் பெற்ற அதிபர் ஜார்ஜ் டபிள்யூ (GEORGE W. BUSH) புஷ் 2005ஆம் ஆண்டு ஜார்ஜியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது அவர் மீது கையெறி குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. எனினும் கையெறி குண்டு வெடிக்காததால் புஷ் நூலிழையில் உயிர் தப்பினார்.

தியோடர் ரூஸ்வெல்ட்

தியோடர் ரூஸ்வெல்ட்

அமெரிக்காவின் அதிபர்களாக இருந்தவர்கள் மட்டுமில்லை... அதிபர் வேட்பாளர்கள் மீதும் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. 1912 ஆம் ஆண்டு அதிபர் வேட்பாளரான தியோடர் ரூஸ்வெல்ட் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் இருந்து அவர் தப்பினார்.

ராபர்ட் எப் கென்னடி

ROBERT F. KENNEDY

ஆனால் ,1968 ஆம் ஆண்டு ஜனநாயக கட்சி வேட்பாளரான ராபர்ட் எப் கென்னடி (ROBERT F. KENNEDY) லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார். 1972ஆம் ஆண்டு ஜார்ஜ் சி வால்லஸ்(GEORGE C WALLACE) மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் இருந்து உயிர் தப்பினாலும், அவர் செயல்படாத முடியாத நிலைக்கு தள்ளப்பட்டார்.

இந்தச் சூழலில்தான் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் குடியரசுக் கட்சி வேட்பாளரும், முன்னாள் அதிபருமான டிரம்ப் மீது இந்திய நேரப்படி நேற்று அதிகாலை துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.