அமெரிக்காவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்களுக்கு விசா வழங்கப்படுவது 40 சதவிகிதம் குறைந்துள்ளது.
அமெரிக்காவில் தற்போது சுமார் 2 லட்சம் இந்திய மாணவர்கள் உயர்கல்வி பயின்று வருகின்றனர். கடந்த 2017-18-ஆம் ஆண்டில் ஒரு லட்சத்து 96 ஆயிரம் மாணவர்கள் அமெரிக்காவில் உயர்கல்வி படித்தனர். இதுவே கடந்த ஆண்டில் 3 சதவிகிதம் மட்டுமே அதிகரித்து 2 லட்சத்து 2 ஆயிரம் மாணவர்களாக உயர்ந்துள்ளதாக அமெரிக்க அரசின் புள்ளி விவரங்களில் தெரியவந்துள்ளது.
அமெரிக்காவில் உயர்கல்வி படிப்பதற்கு இந்திய மாணவர்கள் ஆர்வம் காட்டி வந்தாலும், விசா பெறுவதற்கான நடைமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளது உள்ளிட்ட காரணங்களால் அங்கு செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
2015-ஆம் ஆண்டில் 74 ஆயிரத்து 831 மாணவர்களுக்கு உயர்கல்வி பயில அமெரிக்கா விசா வழங்கிய நிலையில், 2018-ஆம் ஆண்டில் 40 சதவிகிதம் குறைந்து 42 ஆயிரத்து 694 மாணவர்களுக்கு மட்டுமே விசா வழங்கப்பட்டுள்ளது.