இந்தியா - பாகிஸ்தான் இடையே மோசமான நிலைமை நிலவுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி 14ம் தேதி சிஆர்பிஎப் வீரர்களின் வாகனம் மீது பயங்கரவாதிகள் தற்கொலைப்படை கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். இந்தக் கொடூர தாக்குதலில் துணை ராணுவ வீரர்கள் 40 பேர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலுக்கு ஜெய்ஷ் இ முகமது அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
இந்த தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. புல்வாமா தாக்குதலுக்கு அமெரிக்கா, ரஷ்யா உட்பட உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன.
இந்நிலையில், இதுகுறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “புல்வாமா தாக்குதல் சம்பவத்தில் இந்தியா தனது வீரர்களை இழந்து நிற்கிறது. அதன் வலியை நான் புரிந்து கொள்கிறேன். புல்வாமா சம்பவத்திற்கு பிறகு இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நிலைமை மிகவும் மோசமாகி வருகிறது.
இரு நாடுகளுக்கும் இடையே உள்ள பகை முடிவுக்கு வர வேண்டும். இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான பிரச்னையில் ஏராளமான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த சம்பவங்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். இரு நாடுகளுக்குள் அமைதியை ஏற்படுத்த நாங்கள் முயற்சி செய்வோம்” எனத் தெரிவித்தார்.