மடகாஸ்கரை புரட்டி போட்ட புயலுக்கு இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 92 ஆக அதிகரித்துள்ளது. சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்திய பெருங்கடலில் உருவான பட்சிராய் புயல் வலுவடைந்து கடந்த சனிக்கிழமை அன்று மடகாஸ்கரின் மனன்ஜரி நகர் அருகே கரையை கடந்தது. நிலப் பகுதியை புயல் நெருங்கியபோது மணிக்கு 165 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய காற்று, பின்னர் படிப்படியாக அதிகரித்து 235 கிலோ மீட்டர் வேகத்தில் வீசியது. இதனால், மின்கம்பங்கள், மரங்கள் சாய்ந்து விழுந்தன.
தொலைதொடர்புகள் துண்டிக்கப்பட்டன. புயலை தொடர்ந்து பெய்த கனமழையால் தாழ்வான பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது. பலவீனமான கட்டடங்கள் சேதமடைந்தன. வெள்ளம், நிலச்சரிவு உள்ளிட்ட மழை தொடர்பான விபத்துகளில் சிக்கி இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 92 ஆக அதிகரித்துள்ளது. வெள்ளத்தில் தத்தளித்த சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.