இந்தோனேஷியாவில் கொரோனாவால் குழந்தைகளின் உயிரிழப்பு அதிகரித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகின் நான்காவது மிக அதிக மக்கள்தொகை கொண்ட இந்தோனேஷியா நாட்டில் கடந்த சில வாரங்களில் மட்டும் நூற்றுக்கணக்கான குழந்தைகள் கொரோனா நோய்த்தொற்றால் உயிரிழந்துள்ளனர். இவர்களில் பலர் 5 வயதுக்கும் உட்பட்டவர்கள். மேலும் இந்தோனேஷியாவில் இதுவரை கொரோனா தொற்றுக்கு உள்ளானதில் 12.5 சதவிகிதத்தினர் குழந்தைகள் என்பது அந்நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த இறப்பு வீதமானது மற்ற நாடுகளைவிட அதிகம் என்கிறது புள்ளிவிவரம்.
இந்தோனேஷியாவில் நிகழும் குழந்தைகள் உயிரிழப்புக்குக் காரணம் டெல்டா வகை வைரஸ்தான் என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். ஆசியாவில் கொரோனாவின் மையப்பகுதியாக இந்தோனேஷியா உருமாறி உள்ளது. கர்ப்பிணிகளின் வயிற்றில் உள்ள சிசுக்களும் பாதித்து வரும் நிலையில், பிறந்த குழந்தைகளும் உயிரிழந்துள்ளதால் மக்கள் நிலைகுலைந்து போயுள்ளனர்.
கொரோனாவால் குழந்தைகளின் உயிரிழப்பு அதிகரித்துள்ளதற்கு பல காரணங்கள் இருப்பதாகக் சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். ஊட்டச்சத்து குறைபாடு, உடல் பருமன், நீரிழிவு நோய் மற்றும் இதய நோய் போன்ற அடிப்படை சுகாதார நிலைமைகளால் சிலர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கக்கூடும் என்கின்றனர் நிபுணர்கள்.
கடந்த வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 50 ஆயிரம் பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. இதில் 1,566 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இந்தோனேஷியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட விகிதம் மிகக்குறைந்த எண்ணிக்கையிலேயே உள்ளன.
இந்தோனேஷியாவில் வெறும் 16% பேர் மட்டுமே ஒரு டோஸை பெற்றுள்ளனர். 6% பேருக்கு மட்டுமே முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மற்ற நாடுகளைப் போலவே, இந்தோனேஷியாவிலும் 12 வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்படவில்லை. அங்கு சமீபத்தில் தான் 12-18 வயதுடையவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது.