போரால் பாதிக்கப்பட்ட பகுதி pt web
உலகம்

லெபனானில் இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்; 2100-ஐ கடந்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை..

லெபனானில் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை 2,100 ஐ கடந்துள்ளது.

PT WEB

லெபனானில் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை 2 ஆயிரத்து 100 ஐ கடந்துள்ளது.

உருக்குலைந்த கட்டடங்கள்.. இடம்பெயர்ந்த குடும்பங்கள்.. நிலை குலைந்த வாழ்க்கை.. லெபனானில் உள்ள ஹெஸ்புல்லா ஆயுதக்குழுக்களை அடியோடு அகற்ற வேண்டும் என்ற முனைப்போடு இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலின் வெளிப்பாடு. கடந்த ஆண்டு காசாவில் ஹமாசுக்கு எதிராக தாக்குதலை தொடங்கிய அடுத்த நாள் முதலே லெபனானில் ஹெஸ்புல்லாவுக்கு எதிரான தாக்குதலையும் இஸ்ரேல் தொடங்கிவிட்டது.

லெபனான் மீது இதுவரை 9,470 முறை தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இந்த ஓராண்டில் இதுவரை 2,141 பேர் இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர். 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக லெபனான் அமைச்சர் நசீர் யாசின் தெரிவித்துள்ளார். தாக்குதலால் வீடுகளை இழந்தவர்களுக்காக ஆயிரம் முகாம்கள் திறக்கப்பட்டுள்ளன. தற்போது ஒரு லட்சத்து 80 ஆயிரம் பேர் முகாம்களில் தங்கியுள்ளனர்.

ஹெஸ்புல்லா நிலைகளின் மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்திவருகிறது. பதிலுக்கு தெற்கு லெபனான் பகுதியில் முன்னேறிவரும் இஸ்ரேல் ராணுவத்தை தாக்கிவருவதாக ஹெஸ்புல்லா கூறியுள்ளது. அதேபோல வடக்கு இஸ்ரேலிலும் தாக்குதலை நடத்தியதாக ஹெஸ்புல்லா கூறியுள்ளது.