உலகம்

ஆப்கானிஸ்தான் தேர்தல் பரப்புரை பேரணியில் குண்டு வெடிப்பு: 24 பேர் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தான் தேர்தல் பரப்புரை பேரணியில் குண்டு வெடிப்பு: 24 பேர் உயிரிழப்பு

webteam

ஆப்கானிஸ்தானில் அதிபர் அஷ்ரப் கனி பங்கேற்ற தேர்தல் பரப்புரை பேரணியில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் 2‌0க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். 

ஆப்கானிஸ்தானில் வரும் 28 ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி நாடு முழுவதும் பரப்புரை நடைபெற்று வருகின்றது. ஆப்கானிஸ்தானின் வடக்குப் பகுதியில் உள்ள பார்வான் மாகாணத்தில் அதிபர் அஷ்ரப் கனி பங்கேற்ற தேர்தல் பேரணி நடைபெற்றது. அப்போது  இந்தக் கூட்டத்தில்  சக்திவாய்ந்த குண்டு வெடித்தது.  

இதனைத் தொடர்ந்து பேரணியில் கலந்து கொண்டவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். ‌அந்தப் பகுதியில் பெரும் குழப்பம் நிலவியது. குண்டுவெடிப்பில் 26 பேர் கொல்லப்பட்டதாக முதல்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 30-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. குண்டுவெடிப்பில் அதிபர் அஷ்ரப் கனிக்கு எந்த பாதிப்பும் நேரிடவில்லை என்றும், அவர் பாதுகாப்பாக இருக்கிறார் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சதிச்செயலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.