அமெரிக்க டாலர் file image
உலகம்

’டாலர்’ பயன்பாட்டைக் குறைக்க முடிவு! அமெரிக்காவுக்கு எதிராகக் களமிறங்கிய நாடுகள்!

உலக நாடுகளின் வர்த்தகத்தில் அமெரிக்காவின் டாலர் பயன்பாட்டைக் குறைக்கும் நடவடிக்கையில் சில நாடுகள் களம் இறங்கியிருப்பதாக் கூறப்படுகிறது.

Prakash J

ஒரு நாட்டின் வளர்ச்சி, அதன் உற்பத்தியையும் வர்த்தகத்தையும் நம்பியே இருக்கிறது. குறிப்பாக, ஒரு நாட்டின் கரன்சி மூலம் வர்த்தகம் செய்யப்படுவதால், அந்த நாட்டுக்குத்தான் மதிப்பு அதிகம். காரணம், அக்கரன்சியானது உலகம் முழுவதும் பயன்படுத்தப்படுவதால் அதன் மதிப்பு தொடர்ந்து ஏற்ற இறக்கத்திலேயே இருக்கும். தவிர, இது அதிகளவில் புழக்கத்தில் இருப்பதுடன், பயன்படுத்துவதும் எளிதாகிறது. இதில், உலகளவில் பல்வேறு நாடுகளுக்கு இடையே செய்யப்படும் வர்த்தகம், அமெரிக்காவின் டாலரை அடிப்படையாகக் கொண்டு செய்யப்பட்டு வருகிறது. அதாவது, உலகில் பெரும்பான்மையான பொருள் வாங்குவதற்கும், விற்பதற்கும் அமெரிக்க டாலர் மதிப்பிலேயே விலை நிர்ணயிக்கப்பட்டு, டாலரை பயன்படுத்தியே வர்த்தகம் நடைபெறுகிறது.

மேலும், சில நாடுகள் தங்கள் நாட்டின் கரன்சியாக அமெரிக்காவின் டாலரைக் கொண்டிருப்பதுடன், இன்னும் சில நாடுகள் தங்கள் நாட்டு நாணயத்துடன் அமெரிக்க டாலரை ஒப்பிடவும் செய்கின்றன. அதனாலேயே, உலகின் 60% நிதி கையிருப்புகள் அமெரிக்க டாலர்களில் வைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், சில நாடுகள் டாலரைப் புறக்கணித்துவிட்டு, தங்கள் நாட்டு நாணய மதிப்பில் வர்த்தகம் செய்ய முடிவெடுத்துள்ளன. இதில், இந்தியாவும் இணைந்திருப்பதுதான் வியப்புக்குரிய விஷயம்.

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, அமெரிக்காவின் டாலர் முதன்மை கரன்சியாக மாறியதால், மற்ற நாடுகளும் அதை நம்பி இருக்க வேண்டிய சூழல் ஆரம்பித்தது. அதுமுதல் உலக வர்த்தகத்தில் அமெரிக்காவின் டாலர் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியது. ஆனால், தற்போது அதிலிருந்து விலகி, சில நாடுகள் தங்கள் நாட்டு கரன்சி மூலம் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக சவூதி அரேபியா, பிரிட்டன், சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் டாலரைத் தவிர்த்து பிற கரன்சிகளில் வர்த்தகம் செய்ய முடிவெடுத்துள்ளன. நிதி நெருக்கடி, பணவீக்கம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால் அமெரிக்காவின் டாலர் மதிப்பு கணிக்க முடியாத அளவுக்கு ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வருகிறது.

அதிலும் கொரோனா தொற்றுப் பரவலுக்குப் பின் டாலரில் ஏற்படும் மாற்றம், பொருளாதார உறுதியற்ற தன்மையை உருவாக்கி இருக்கிறது எனக் கூறப்படுகிறது. இதைத் தவிர்க்கும் பொருட்டே, டாலர் பயன்பாட்டைக் குறைக்கும் நடவடிக்கையில் மேற்கண்ட நாடுகள் களம் இறங்கியிருப்பதாக் கூறப்படுகிறது. குறிப்பாக, உலகின் பல நாடுகள் தற்போது இந்திய ரூபாயில் வர்த்தகம் மேற்கொள்ளலாம் என முடிவெடுத்துள்ளன. அதன்படி, இதுவரை இந்தியாவுடன் அமெரிக்க டாலரில் வர்த்தகம் செய்து வந்த வங்கதேசம், இனி இந்திய ரூபாயிலேயே வர்த்தகத்தை மேற்கொள்ள முடிவு செய்துள்ளது. அதுபோல், சீனாவும் பிரேசிலும் தங்களுடைய கரன்சிகளில் வர்த்தகம் செய்ய முடிவெடுத்துள்ளன. தொடர்ந்து அர்ஜெண்டினாவும் யுவான் மூலம் வர்த்தகம் செய்ய இருப்பதாக சீனாவிடம் தெரிவித்துள்ளது.

இவை அனைத்தும் அமெரிக்காவின் டாலர் மதிப்பைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இதற்காக, அமெரிக்க டாலரை நம்பியிருக்கும் நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு வருகின்றன. இந்த டாலர் மதிப்பிழப்பை ஆதரிக்கும் நாடுகளில் சீனாவும், ரஷ்யாவும் முன்னிலையில் உள்ளன. என்றாலும், பிற நாடுகளின் கரன்சி மூலம் வர்த்தகம் பெரிய அளவில் வெற்றியடைந்தால், அது அந்த நாடுகளுக்கு நன்மையே தரும்.

indian rupees

உதாரணத்துக்கு, நம் நாட்டு ரூபாய் மதிப்பில் வர்த்தகம் மேற்கொள்ளும்போது நம்முடைய ரூபாயின் மதிப்பும் சர்வதேச அரங்கில் வலுவடையும். அதன்மூலம் நம்முடைய பொருளாதாரமும் வலுவடையும். அதேநேரத்தில், டாலரைப்போல பெரியளவில் மாற்றத்தை எதிர்கொள்ளாத ஒரு கரன்சி வேறு எதுவும் இல்லை என்பதால் டாலரை விரைவில் முழுமையாகக் கைவிட வாய்ப்புகள் மிகக் குறைவு எனவும் சொல்லப்படுகிறது.