கொரனா வைரஸ் பரவுவதைத் தடுக்க சீனர்கள் மந்திரத்தை உச்சரிக்க வேண்டும் என புத்தமதத் தலைவர் தலாய் லாமா தெரிவித்துள்ளார்.
கொரனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 131 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் தாக்கத்திற்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 515ஆக அதிகரித்துள்ளது. வுஹான் உள்ளிட்ட நகரங்கள் ஆள்நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகின்றன. வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
எனினும் வைரஸ் தாக்கி முறையான சிகிச்சை பெற்ற 60 பேர் குணமடைந்து வீடு திரும்பி இருப்பது சற்றே ஆறுதலை அளித்துள்ளது. முகமூடி அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில் பள்ளி கல்லூரிகளில் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. மக்கள் வெளியில் வருவதையே தவிர்க்க வேண்டும் என சீன அரசு அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில் கொரனா வைரஸ் பரவுவதைத் தடுக்க சீனர்கள் மந்திரத்தை உச்சரிக்க வேண்டும் என புத்தமதத் தலைவர் தலாய் லாமா தெரிவித்துள்ளார். தலாய் லாமாவிடம் ஃபேஸ்புக் வழியாக கொரனா வைரஸ் குறித்து சீனாவில் உள்ள அவரது ஆதரவாளர்கள் சிலர் கேட்டனர்.
அதற்கு பதிலளித்த தலாய் லாமா, தாரா மந்திரமான ‘ஓம் தாரே தத்தாரே துரே சோஹா’ என்ற வரியை தொடர்ந்து உச்சரித்து வந்தால், கொரனா வைரஸ் பரவாமல் கட்டுப்படுத்த முடியும் எனக் கூறியுள்ளார். இதன்மூலம், கொரனா வைரஸ் பாதித்தவர்கள் அமைதியாகவும், கவலைகள் இன்றியும் இருக்கலாம் என்று கூறியுள்ள தலாய் லாமா, மந்திரத்தை உச்சரிக்கும் அவரது குரல் பதிவையும் ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார்.