உலகம்

சீனாவில் உச்சத்தை தொட்ட தினசரி கொரோனா பாதிப்பு - கடுமையான கட்டுப்பாடுகள் பலனளிக்கவில்லையா?

Sinekadhara

2019ஆம் ஆண்டு சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸானது உலகம் முழுவதும் பரவி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஏராளமான உயிரிழப்பு, பொதுமுடக்கம் மற்றும் பொருளாதார வீழ்ச்சி என உலகமே இந்த நோய்த்தொற்றை கட்டுப்படுத்த முடியாமல் திணறியது. கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பல கொரோனா திரிபுகள், பல்வேறு அலைகளாக பரவி, தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு, தொற்றின் தாக்கமானது ஓரளவிற்கு ஓய்ந்தபிறகு, ஊரடங்குகள் தளர்த்தப்பட்டு மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிவருகின்றனர். பொருளாதாரமும் சற்று முன்னேறி வரும் நிலையில், தற்போது மீண்டும் சீனாவில் புதியவகை கொரோனா தொற்று பரவத் தொடங்கியிருக்கிறது. இது உலக நாடுகளை மீண்டும் அச்சத்திற்குள் ஆழ்த்தியிருக்கிறது.

சீனாவில் தற்போது மீண்டும் கொரோனா தொற்று பரவத் தொடங்கியதிலிருந்து இன்று கொரோனா எண்ணிக்கை மிக உயர்ந்த அளவை எட்டியுள்ளது. இன்று வெளியான தேசிய சுகாதார மையத்தின் தரவுகளின் அடிப்படையில் நேற்று ஒரேநாளில் 31,454 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அதில் 27,517 பேருக்கு அறிகுறிகள் தென்படவில்லை என்பது குறிப்படத்தக்கது.

இதனால் கொரோனா கட்டுப்படுத்த பகுதிநேர ஊரடங்குகள், கோவிட் சோதனை அதிகரிப்பு மற்றும் பயணக் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இருப்பினும் சீனாவின் மக்கள்தொகை 1.4 மில்லியனுடன் ஒப்பிடுகையில், தற்போது உறுதியாகியுள்ள தொற்றின் எண்ணிக்கை மிகக்குறைவு.

சீனாவின் தலைநகரான பெய்ஜிங்கில் பூஜ்ஜிய - கொரோனா கொள்கை (zero-Covid policy) இன்றுவரை கடுமையாக கடைபிடிக்கப்படுகிறது. சிறு தொற்று வெடிப்புகூட முழு நகரத்தையும் மூடும் சூழலை ஏற்படுத்தலாம் என்பதால், பாதிக்கப்பட்ட நோயாளிகள் கடுமையான தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டு வருகின்றனர். கிட்டத்தட்ட 3 ஆண்டுகளாக இந்த கொள்கையானது தளர்த்தப்படாததால் அங்குள்ள மக்களுக்கு சோர்வு மற்றும் ஒருவித வெறுப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறது.

இதனால் மக்கள் ஆங்காங்கே எதிர்ப்புகளைத் தூண்டி, உலகின் இரண்டாவது பெரிய பொருளாதார நாடான சீனாவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒருபுறம் பூஜ்ஜிய - கொரோனா கொள்கைக்கு அங்குள்ள மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், மீண்டும் கொரோனா தொற்றின் வேகம் அதிகரிக்க தொடங்கியுள்ளதால், சீனாவின் கொள்கை பலனளிக்கவில்லை என பலரும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.