கொரோனா தடுப்பூசிகளை எதிர்த்த செக் குடியரசைச் சேர்ந்த பாடகி ஹனா ஹோர்கா, வேண்டுமென்றே விரும்பி கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இறந்துவிட்டதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
செக் குடியரசைச் சேர்ந்த 57 வயதான இசைக்கலைஞர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பின்னர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார். ஹனா ஹோர்காவின் மகன் ஜான் ரெக் மற்றும் அவரது கணவர் இருவரும் முழுமையாக தடுப்பூசி செலுத்திக்கொண்ட போதிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இருப்பினும், அவர்களிடமிருந்து விலகி இருக்க வேண்டாம் என்று முடிவு செய்த ஹோர்கா, தனக்கும் வைரஸ் தோற்று வேண்டும் என விரும்பினார்.
இது தொடர்பாக பேசிய ஹோர்காவின் மகன் ஜான்,"நாங்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் அவர் ஒரு வாரம் தனிமைப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அவர் முழு நேரமும் எங்களுடன் இருந்தார்.செக் குடியரசில் சினிமாக்கள், பார்கள் மற்றும் கஃபேக்கள் உட்பட பல சமூக மற்றும் கலாச்சார இடங்களுக்குள் நுழைவதற்கு தடுப்பூசி அல்லது சமீபத்திய வைரஸ் தொற்றுக்கான சான்று தேவைப்படுகிறது. எனவே தனக்கும் கொரோனா தொற்ற வேண்டும் என அவர் விரும்பினார்.
இது தொடர்பாக எனது தாய் பல பதிவுகளையும் இட்டார், அவரைப் பின்தொடர்பவர்களில் பலர் அவரது செயல்களை ஆதரித்தனர். ஆனால் கோவிட் தொடர்பான சிக்கல்கள் காரணமாக அவர் பதிவிட்ட சில மணிநேரங்களிலேயே இறந்தார். தடுப்பூசி எதிர்ப்பு கருத்துக்களை என் தாயார் அடிக்கடி தனது தளங்களில் பகிர்ந்து கொண்டார்" என்று கூறினார்.