உலகம்

சிகரெட் துண்டுகளை அப்புறப்படுத்தி அசத்தும் காக்கைகள்! ஆச்சரியத்தில் ஆழ்த்தும் வீடியோ

சிகரெட் துண்டுகளை அப்புறப்படுத்தி அசத்தும் காக்கைகள்! ஆச்சரியத்தில் ஆழ்த்தும் வீடியோ

webteam

ஸ்வீடனில் சிகரெட் துண்டுகளை அப்புறப்படுத்த காக்கைகள் பயன்படுத்தப்பட்டு வருவது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஸ்வீடனின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள நகரம் சோடர்டால்ஜி. சுற்றுலா தலங்கள் நிறைந்துள்ள பகுதி என்பதால் இந்நகருக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் வருகை தருவது வழக்கம். இவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் சிகரெட்டுகளை புகைத்து அங்குள்ள பகுதிகளிலேயே வீசி விடுகின்றனர். இதனால் சோடர்டால்ஜி நகரமே சிகரெட் குப்பைகள் நிரம்பி அலங்கோலமாக காட்சியளித்தது.

இந்த சிகரெட் குப்பைகளை அகற்ற சோடர்டால்ஜி நகர நிர்வாகம் ஆண்டுதோறும் கோடிக்கணக்கான பணத்தை செலவழித்து வந்தது. இந்த சூழலில்தான், காக்கைகளை பயன்படுத்தி குப்பைகளை அகற்றும் வித்தியாசமான யோசனை சோடர்டால்ஜி நகர நிர்வாகத்துக்கு தோன்றியது.

அதன்படி, அந்நகரில் சுற்றித்திரியும் காக்கைகள் சிகரெட் துண்டுகளை எடுத்து வந்தால் அதற்கு உணவுப் பண்டங்களை வழங்கி பயிற்சி அளித்தனர் நகர நிர்வாகத்தினர். ஆச்சரியப்படுத்தும் விதமாக, அடுத்த சில நாட்களிலேயே அங்குள்ள காக்கைகள் சிகரெட் குப்பைகளை எடுத்து வந்து நகர நிர்வாகத்தினரிடம் வழங்கி உணவைப் பெறத் தொடங்கின. இவ்வாறு காக்கைகளை பயன்படுத்தியே சிகரெட் குப்பைகள் இல்லாத நகரமாக சோடர்டால்ஜி தற்போது மாற்றப்பட்டிருக்கிறது.

சிகரெட் துண்டுகளை காக்கைகள் சேகரிக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இதனிடையே, இந்த மாதிரியை தங்கள் நாடுகளிலும் பரிசோதித்து பார்க்க பல நாடுகள் ஆலோசித்து வருகின்றன.

youtube video source: reuters