உலகம்

தடுப்பூசிகளில் கூட உலக நாடுகளிடையே இவ்வளவு ஏற்றத்தாழ்வா? - விரிவான பார்வை

தடுப்பூசிகளில் கூட உலக நாடுகளிடையே இவ்வளவு ஏற்றத்தாழ்வா? - விரிவான பார்வை

EllusamyKarthik

உலக நாடுகளை நடுங்க வைத்துள்ளது கொரோனா வைரஸ். கடந்த 2019இல் சீனாவில் உருவான இந்த வைரஸ் இன்று உலகநாடுகள் மத்தியில் தீவிரமாக பரவி வருகிறது. கடந்த 2020இல் இந்த வைரஸ் தொற்று ஏற்படுத்திய தாக்கத்தினால் உலக நாடுகள் இதனை தடுப்பதற்கான தடுப்பு மருந்துகளை கண்டறியும் பணியில் இறங்கின. அதன் பலனாக அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், இந்தியா என சில நாடுகள் தனித்தனியே கொரோனா தடுப்பு மருந்தை உருவாக்கின. அதில் சில மருந்துகளுக்கு உலக பொது சுகாதார நிறுவனமும் அனுமதி கொடுத்திருந்தது. 17,44,32,190 பேர் உலக அளவில் கொரோனா நோய் தொற்றால் இதுவரையில் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 37,58,217 பேர் உயிரிழந்துள்ளனர். உலக அளவில் 2,12,12,90,083 டோஸ் தடுப்பு மருந்துகள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளன. 45,77,24,335 முழுவதுமாக அனைத்து டோஸ்களையும் செலுத்திக் கொண்டுள்ளனர். 

அமெரிக்கா மாதிரியான நாடுகளில் கடந்த டிசம்பரில் இருந்து தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் ஜனவரி 16 முதல் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. உலக பொது சுகாதார நிறுவனத்தின் தடுப்பு மருந்து தரவுகளின் படி சுமார் 287 மருந்துகள் கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு ஆற்றலை உருவாக்க தயாரிக்கபட்டுள்ளன. இதில் 102 தடுப்பு மருந்துகள் கிளினிக்கல் ஃபேஸில் உள்ளன. 185 மருந்துகள் பிரீ கிளினிக்கல் ஃபேஸில் உள்ளன.

செயலிழந்த வைரஸ், RNA, DNA, புரோட்டீன் சப்மிட், வைரல் வெக்டார், Live attenuated virus, வைரஸ் மாதிரியான பார்ட்டிக்கல் முதலியவற்றை பிளாட்பார்மாக கொண்டு தான் இந்த தடுப்பு மருந்துகள் தயாரிக்கப்பட்டுள்ளன. ஆஸ்ட்ராசென்கா, கோவாக்சின், Moderna, Pfizer, ஸ்புட்னிக் வி என பல தடுப்பூசிகள் இந்த அடிப்படையில் உருவானவை தான். 

கொரோனாவை எதிர்கொள்ள தடுப்பூசியே சிறந்த ஆயுதம் என உலக பொது சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. அதே வேளையில் உலக அளவில் நூற்றுக்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் இருந்தும் உலக நாடுகளுக்கு இடையே உள்ள வேறுபாடு என்பது மற்ற விஷயங்களில் எப்படி ஏற்றத்தாழ்வு நீடிக்கிறதோ அதே மாதிரியான ஏற்றத்தாழ்வு தடுப்பூசி விவாகரத்திலும் நீடிக்கிறது.  

வளர்ந்த நாடுகளில் எப்படி?

உதாரணமாக வல்லரசு நாடு என சொல்லப்படும் அமெரிக்காவில் கடந்த டிசம்பர் மாதம் தொடங்கி இதுவரையில் 30.3 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. 14 கோடி பேர் முழுமையாக தடுப்பூசி டோஸ்களை செலுத்திக் கொண்டுள்ளனர். அந்த நாட்டின் மொத்த மக்கள் தொகையில் இது 42.6 சதவிகிதம். 

அதே போல பிரிட்டனில் 42.5 சதவிகித மக்களுக்கும், இஸ்ரேல் நாட்டில் 56 சதவிகித மக்களுக்கும், ஐக்கிய அரபு அமீரகத்தில் 38.8 சதவிகிதம் பேரும் முழுமையாக தடுப்பூசிகளை பெற்றவர்களாக உள்ளனர்.

இத்தாலியில் 22.1 சதவிகிதத்தினரும், ஜெர்மனியில் 21.9  சதவிகிதத்தினரும், பிரான்ஸ் நாட்டில் 19.2 சதவிகிதத்தினரும் தடுப்பூசியை முழுமையாக செலுத்திக் கொண்டுள்ளனர். 

வளர்ந்து வரும், பின்தங்கிய நாடுகளில் எப்படி?

சிரியா, காங்கோ, டோங்கா, சாலமேன் தீவுகள் மாதிரியான நாடுகளில் ஒரு லட்சத்திற்கும் குறைவான தடுப்பூசி டோஸ்கள் மட்டுமே செலுத்தப்பட்டுள்ளன. உலகிலேயே ஆப்ரிக்கா நாடான புர்க்கினா பாசோவில் வெறும் 200 நபர்களுக்கு தான் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. சுமார் இரண்டு கோடி பேர் அந்த நாட்டில் வசித்து வருகின்றனர் என தரவுகள் சொல்கின்றன. 

பிரேசில் நாட்டில் 11.1 சதவிகித மக்களும், கொலம்பியாவில் 7 சதவிகிதம் பேருக்கும், நேபாளத்தில் 3 சதவிகிதத்தினருக்கும் தான் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 

இந்தியாவில் எப்படி?

கடந்த ஜனவரி 16 முதல் இந்தியாவில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதுவரை  24,27,26,693 டோஸ்கள் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 4,72,43,748 பேர் இரண்டு டோஸ்களையும் பெற்றுள்ளனர். 

>தடுப்பூசியை பெறுவதில் உலகின் அனைத்து நாடுகளை சேர்ந்த மக்களுக்கும் ஒரே அளவில் சமமான அணுகல் வேண்டும். அதை செய்தால் தான் கொரோனாவை வீழ்த்த முடியும். இப்போதைக்கு இந்த தடுப்பூசிகள் ஒரு தீர்வாக அமைந்துள்ளது. அதனால் தற்போது பயன்பாட்டில் உள்ள 102 தடுப்பு மருந்துகள் மட்டும் அல்லது மேலும் பரிசோதனை அளவில் உள்ள 185 தடுப்பு மருந்துகளை துரிதமாக ஆய்வு செய்து அதனை செயலுக்கு கொண்டு வருவது இதற்கு ஒரு தீர்வாக அமையும் என சமூக ஆர்வலர்கள் சொல்கின்றனர். 

The rich get richer and the poor get poorer என்ற தியரி தடுப்பூசி விவகாரத்திலும் பொருந்தி போவது வேதனையிலும் வேதனை. 

வல்லரசு ஆதிக்கம் கொண்ட நாடுகள் பொருளாதார ரீதியாக பின்தங்கிய நாடுகளுக்கு உதவ முன்வருவதுதான் இதற்கு ஒரே தீர்வாகும். 

- எல்லுச்சாமி கார்த்திக்