உலகம்

85 நாடுகளில் டெல்டா வகை கொரோனா பாதிப்பு உறுதி - உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சி தகவல்

85 நாடுகளில் டெல்டா வகை கொரோனா பாதிப்பு உறுதி - உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சி தகவல்

JustinDurai
இந்தியாவில் முதல்முறையாகக் கண்டறியப்பட்ட டெல்டா வகை கொரோனா தற்போது உலகம் முழுவதும் 85 நாடுகளில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாற்றம் அடைந்து கொண்டே வருகிறது. இந்தியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பிரேசில் என பல நாடுகளில் உருமாறிய வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த உருமாறிய வைரஸ்கள் பற்றிய வாராந்திர தொற்றுநோயியல் அறிக்கையை உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
''இங்கிலாந்தில் கண்டறியப்பட்டுள்ள உருமாறிய வைரஸ் ஆல்பா, 170 நாடுகளிலும், தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள வைரஸ் பீட்டா, 119 நாடுகளிலும், பிரேசில் நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள வைரஸ் கமா, 71 நாடுகளிலும் பரவி உள்ளது.
இந்தியாவில் முதல்முறையாகக் கண்டறியப்பட்ட டெல்டா வகை கொரோனா தற்போது உலகம் முழுவதும் 85 நாடுகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவற்றில் 11 நாடுகள் கடந்த 2 வாரங்களுக்குள் டெல்டா கொரோனாவைக் கண்டறிந்துள்ளன.
இந்த கொரோனா வகைகளில் டெல்டா மிகவும் தீவிரமாகப் பரவும் தன்மை கொண்டதாக உள்ளது. உலக நாடுகளில் அதன் பரவும் வேகம் தொடர்ந்தால், விரைவில் அது சர்வதேச அளவில் ஆதிக்கம் செலுத்தும் கொரோனா வகையாக அது ஆகிவிடும். சிங்கப்பூரில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் டெல்டா வைரஸ் தொற்று அதிகளவு ஆக்சிஜன் தேவை, தீவிர சிகிச்சைப் பிரிவு சேர்க்கை அல்லது இறப்பு ஆகியவற்றுடன் தொடர்புடையது என காட்டுகிறது.
கவலைக்குரிய உருமாறிய வைரஸ்களான ஆல்பா, பீட்டா, கமா, டெல்டா ஆகிய 4 வைரஸ்களும் உலக சுகாதார அமைப்பால் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன'' என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.