உலகம்

சீனா: விவாகரத்து கேட்ட கணவன்... வீட்டுவேலைக்கு ஊதியம் தரச்சொல்லி தீர்ப்பளித்த நீதிமன்றம்

சீனா: விவாகரத்து கேட்ட கணவன்... வீட்டுவேலைக்கு ஊதியம் தரச்சொல்லி தீர்ப்பளித்த நீதிமன்றம்

Sinekadhara

சீனாவில் விவாகரத்து கேட்ட கணவனிடம், தனது மனைவி இதுவரை செய்த வீட்டுவேலைக்கு ஊதியம் வழங்கச்சொல்லி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சீனாவின் தலைநகரமான பெய்ஜிங்கில் விவாகரத்து நீதிமன்றம் அளித்த ஒரு வித்தியாசமான தீர்ப்பு சமூக ஊடகங்களில்விவாதப் பொருளாகியுள்ளது. சீனாவில் இந்த ஆண்டு துவக்கத்தில் புதிய சட்டம் இயற்றப்பட்ட பிறகு வந்த தீர்ப்பாகும்.

நீதிமன்றம் கொடுத்த தகவல்படி, 2015-ஆம் ஆண்டு திருமணமான சென் என்ற நபர் தனது மனைவி வேங்கிடம் இருந்து விவாகரத்துக்கோரி நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்தார். விவாகரத்து கொடுப்பதற்கு வேங் முதலில் தயக்கம் காட்டினாலும், பிறகு தனக்கு பொருளாதார ரீதியான உதவிவேண்டும் என்று கூறி விவாகரத்துக்கு ஒப்புக்கொண்டுள்ளார். மேலும் திருமணமானதிலிருந்து சென் தனக்கு வீட்டுவேலைகளிலும், மகனைப் பார்த்துக்கொள்வதிலும் எந்தவொரு உதவியும் செய்ததில்லை என்று கூறி வாதிட்டிருக்கிறார்.

இதனைக்கேட்ட பெய்ஜிங் மாகாணத்திற்கு உட்பட்ட ஃபாங்ஷான் மாவட்ட நீதிமன்றம், வேங்கிற்கு மாதந்தோறும் ஜீவனாம்சமாக 2000 யுவான் கொடுக்கவேண்டும் எனவும், இதற்குமுன்பு செய்த வீட்டு வேலைகளுக்காக மொத்தமாக 50000 யுவான் கொடுக்க வேண்டும் என்ற நிபந்தனையுடம் விவாகரத்து கொடுத்து தீர்ப்பளித்தது.

இதுகுறித்து தலைமை நீதிபதி, ‘’திருமணத்திற்குப்பிறகு ஒரு தம்பதியினருக்கு இருக்கும் சொத்துகள் அனைத்தையுமே இரண்டாக பிரித்துக்கொள்ளலாம். ஆனால் இதுபோன்ற கணக்கிடப்படாத வேலைகளும் மதிப்புப்பெறும் சொத்துகளே’’ என்று பத்திரிகையாளர்களிடம் கூறியிருக்கிறார்.

தீர்ப்பு வெளிவந்த சிலமணி நேரங்களிலேயே இது சமூக ஊடகங்களின் பெரும் கவனத்தைப் பெற்றது. பலரும் இந்த வெறும் 50000 யுவான் என்பது மிகவும் குறைவு. வீட்டுவேலைக்கு செல்லும் பெண்களுக்கே ஒருவருடத்தில் 50000-க்கும் அதிகமாக ஊதியம் கிடைக்கிறது என்று கூறியிருக்கின்றனர். மேலும் பலரும் பெண்கள் வேலைக்கு செல்லவேண்டும் என்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி வருகின்றனர்.

விவாகரத்துப் பெறுபவர்களில் யாரேனும் ஒருவர் குழந்தை வளர்ப்பு, முதியவர்களை பார்த்துக்கொள்ளுதல், துணையின் வேலைகளில் அதிகப் பங்கெடுப்பு இருந்தால் அவர் இழப்பீடு பெறவேண்டும் என்ற புதிய சட்டம் இந்த ஆண்டுமுதல் சீனாவில் அமலுக்கு வந்துள்ளது.

ஏனென்றால், பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு(OECD) வெளியிட்டுள்ள தகவல்படி, சீனப்பெண்கள் ஒருநாளில் கிட்டத்தட்ட 4 மணிநேரம் வீட்டுவேலைகளில் ஈடுபடுகிறார்கள். இது சீன ஆண்களைவிட பெண்கள் 2.5 மடங்கு அதிகமாக ஊதியமில்லா வேலைகளில் ஈடுபடுவதைக் காட்டுகிறது. மற்ற OECD நாடுகளைப் பொருத்தவரை பெண்கள் ஆண்களைவிட 2 மடங்கு ஊதியமில்லா வேலைகளில் ஈடுபடுகிறார்கள்.