உலகம்

இசை மழையில் நனைய வந்தவர்களுக்கு துப்பாக்கி குண்டு மழை: அதிர்ச்சியில் உறைந்த கலைஞர்கள்

இசை மழையில் நனைய வந்தவர்களுக்கு துப்பாக்கி குண்டு மழை: அதிர்ச்சியில் உறைந்த கலைஞர்கள்

rajakannan

அமெரிக்காவின் லாஸ்வேகாஸ் நகரில் இசை நிகழ்ச்சியில் நடந்த துப்பாக்கிச் சூடு அதில் பங்கேற்ற கலைஞர்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

அமெரிக்காவின் மிக முக்கியமான கேளிக்கை நகரமாகவும், சுற்றுலாத் தலமாக விளங்குவது லாஸ்வேகாஸ். வழக்கமான உற்சாகத்துடன் நேற்று இயங்கிக் கொண்டிருந்தது. இசை நிகழ்ச்சிக்காக அப்பகுதியில் உள்ள மைதானம் ஒன்றில் சுமார் 22 ஆயிரம் பேர் திரண்டிருந்தனர். நிகழ்ச்சியின் மேடையில் கலைஞர்கள் உற்சாகமாக இசைக் கருவிகளை வாசித்தும், பாடியும் மைதானத்தில் கூடியிருந்தவர்களை மகிழ்வித்துக் கொண்டிருந்தனர்.

அந்த இடமே இசை வெள்ளத்தில் மூழ்கி இருந்த நேரத்தில் திடீரென படபட ஒரு சத்தம். மேடையில் இருந்த கலைஞர்களுக்கும் கூடியிருந்த மக்களுக்கும் ஒருகணம் என்னவென்றே புரியவில்லை. ஆனால் அது புரிவதற்குள் சில உயிர்கள் துப்பாக்கிக் குண்டுகளுக்கு இரையாகிவிட்டன. துப்பாக்கி சத்தம் கேட்டுக் கொண்டே இருக்கிறது. மேடையில் உள்ள கலைஞர்களுக்கு ஒன்றே புரியவில்லை. அப்படியே திகைத்து போனார்கள். கொண்டாட்டங்கள் நிறைந்திருந்த அந்த இடத்தின் காட்சி சில நிமிடங்களில் முற்றிலும் மாறியது. திரும்பும் திசையெங்கும் மக்களின் அலறல் சத்தங்கள். இதை மேடையில் இருந்த கலைஞர்கள் உறைந்துபோய் பார்த்துக் கொண்டிருந்தார்.

துப்பாக்கிச் சூடு முடிந்து பல மணி நேரங்கள் ஆன பிறகும் அவர்களால் இயல்பு நிலைக்கு வரமுடியவில்லை. நேற்றைய இரவு இப்படி முடியும் என்று அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற யாரும் நினைத்திருக்க மாட்டார்கள். பின்னர், இசை நிகழ்ச்சியில் பங்கேற்ற கலைஞர்கள் தங்களது அதிர்ச்சிகரமான அனுபவத்தை பகிர்ந்தனர். கிட்டாரிஸ்ட் ஒருவர் கூறுகையில், இந்த பயங்கரமான சம்பவம், ‘துப்பாக்கி விதிகள்’ குறித்த எனது பார்வையே மாற்றிவிட்டது என்றார். பலர் ‘நேற்று இரவு வரை’ என்று தலைப்பிட்டு தங்களது அனுபவத்தை தெரிவித்தனர்.