உலகம்

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புக்கு நடத்தப்பட்ட கொரோனா சோதனை - விவரம் வெளியிட்ட வெள்ளை மாளிகை

webteam

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புக்கு நடத்தப்பட்ட மருத்துவ சோதனைகளில் அவருக்கு கொரோனா தாக்குதல் இல்லை என்பது உறுதியாகியிருப்பதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் கொரோனா வைரசின் பாதிப்பு தீவிரமடைந்துள்ள நிலையில், அந்நாட்டில் தேசிய அவசரநிலையை அறிவித்தார் அதிபர் டொனால்டு ட்ரம்ப். அமெரிக்காவில் கொரோனா பாதிப்பில் இதுவரை 41 பேர் உயிரிழந்துள்ளனர். 1700-க்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

வாஷிங்டன் நகரில் உள்ள ரோஸ் கார்டனில் செய்தியாளர்களுடன் பேசிய ட்ரம்ப், அவசர நிலை அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார். அப்போது, கொரோனா நோய்த்தடுப்பு நடவடிக்கைகளுக்காக 50 பில்லியன் டாலர்களை ஒதுக்குவதாகவும் அதிபர் அறிவித்தார்.

இதனிடையே ட்ரம்பை சந்தித்த பிரேசில் அதிகாரி ஒருவருக்கு வைரஸ் தொற்று உறுதியானது. இந்நிலையில், உடல் பரிசோதனை நடத்தப்படுமா என செய்தியாளர்கள்‌ ட்ரம்பிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு தன்னிடம் வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் எதுவும் இல்லை. எனினும் விரைவில் தனக்கு பரிசோதனை நடத்தப்படும் என ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.

அதன்படி அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புக்கு நடத்தப்பட்ட மருத்துவ சோதனைகளில் அவருக்கு கொரோனா தாக்குதல் இல்லை என்பது உறுதியாகியிருப்பதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.