உலகம்

சீனர்களை வெறுப்பது சரியா? - கொரோனா மூலம் நாம் கற்ற பாடம் என்ன?

சீனர்களை வெறுப்பது சரியா? - கொரோனா மூலம் நாம் கற்ற பாடம் என்ன?

subramani

உலகம் முழுக்க ஒவ்வொரு காலகட்டத்திலும் ஏதோ ஒரு கொள்ளை நோய் உருவாவதும் அதற்கு பெரும் எண்ணிக்கையிலான மக்கள் இறப்பதும் வரலாற்றில் பலமுறை
நடந்துள்ளது. உயிர்கள் பிறப்பதும் இறப்பதும் இயற்கைதான். ஆனால் அதிரடியாக கொள்ளை நோய் வந்து பல ஆயிரம் உயிர்களைக் கொண்டு போவதுதான் கொடுமை.
மனித வரலாற்றில் கொள்கை நோய்களின் தாக்கம் விசித்திரமானது.

மத்திய தரைக்கடல் பகுதியில் கிபி.150 முதல் 200 வரையிலான காலகட்டத்தில் உருவான கொள்ளைநோய் பெரியம்மை. அதனை ரோமானியர்கள் அந்தோனைன் பிளேக்
என்றனர். உலகம் முழுக்க கிட்டத்தட்ட 50 லட்சம் பேர் இந்நோய்க்கு பலியாகினர். இந்நோயை தடுப்பூசிகள் போட்டு தற்போது சரி செய்ய முடியும் என்றாலும் முதலில்
இந்நோய் பரவிய போது ரோமானியர்கள் மீது பெரிய வெறுப்புணர்வே உருவானது. இந்நோயை உருவாக்கியவர்கள் மத்திய தரைக்கடல் பகுதியைச் சேர்ந்தவர்கள்தான் என்ற
எண்ணம் உலகம் முழுக்க பரவி அம்மக்களை வெறுக்க வைத்தது.

தற்போது சீனாவின் மீது உலக மக்கள் கொண்டுள்ள பார்வையும் இதைப்போன்றதுதான். “சீன நாட்டுக்காரனா தள்ளிப்போப்பா”, “அட இவனுங்க கண்டதை தின்றுவிட்டு
நோயை பரப்புகிறார்கள்...” என்ற பேச்சு உலக மக்களிடையே தற்போது பரவி வருகிறது. உண்மையில் தங்களுடைய வாழ்க்கை முறையும் உணவுப் பழக்க வழக்கமும்தான்
சரி., மற்றவை தவறு என ஒரு நாட்டார் நினைப்பது வன்முறை. நாம் பின்பற்றும் உணவு முறையில் எந்தக் குறைபாடும் இல்லை என்று நினைப்பதே தவறு. புழுப்பூச்சியை
எல்லாம் சீனர்கள் உண்ணுகிறார்கள் என்பதை வெறுப்புணர்வுடன் பார்க்கும் இந்தியர்களுக்கு ஒரு செய்தி; நம் நிலத்தைச் சேர்ந்த நாகாலாந்து மக்களின் பாரம்பரிய உணவு
நாய்க்கறி. இன்றும் தினசரி சந்தைகளில் நாய்க்கறி அங்கு விற்கப்படுகிறது. இதனை எப்படி எடுத்துக் கொள்வது...?

ஆகவே பரவும் கொள்ளை நோய்களுக்கு நிலம் சார்ந்த, மொழி சார்ந்த எந்த அடையாளமும் வந்துவிடக் கூடாது என்பதில் உலக சுகாதார நிறுவனம் கவனமாக உள்ளது.
நோய்களுக்கு பெயர் வைக்கும் போது கூட இப்படித்தான் வைக்க வேண்டும் என சில நெறிமுறைகளை அது வகுத்துள்ளது. அதன்படி ஒரு நோயின் பெயரானது எந்த மொழி,
நிலம் மற்றும் இனம் சார்ந்த மக்களையும் பிரதிபலித்துவிடக் கூடாது என்பதில் அது கவனம் காக்கிறது. இவ்வளவு ஏன் குறிப்பிட்ட விலங்கு, பறவை என எந்த
வகைமைக்குள்ளும் நோயின் பெயர் வந்துவிடக் கூடாது என்பதே உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டுதலாக உள்ளது.

ஐ.நா சபையானது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகள் மதிக்கப்படவேண்டும் என்ற வழிகாட்டுதல்களை கொடுத்துள்ளது. நோயாளிகளை கனிவுடன் நடத்த
வேண்டும் என உலக நாடுகளை அது கேட்டுக் கொண்டுள்ளது. அப்படி இருக்கும் போது நாம் சீனா என்கிற ஒரு தேசத்தின் மீது வெறுப்பை உமிழ்ந்து தனிமைப்படுத்த
நினைப்பது கூடாது. சில இடங்களில் சீனப் பயணிகள் தாக்கப்பட்டிருக்கின்றனர். சில சீன மாணவர்கள் தாக்கப்பட்டிருக்கிறார்கள். சீனா போன்ற உருவ பொம்மை செய்துகூட
சில இடங்களில் எரிக்கப்பட்டுள்ளன. இப்படிச் செய்வதால் எந்த மாற்றமும் நிகழப்போவதில்லை. அமெரிக்கா, ஜப்பான், ரோம், இந்தியா என உலகின் அனைத்து
நிலத்திலிருந்தும் பல நோய்கள் பரவி உள்ளன. அவ்வாறு உள்ள போது சீனா மட்டும்தான் நோய்களின் உற்பத்தி ஆலை என்பது போல நினைத்துக் கொள்வதும் சீனர்கள் மீது
வெறுப்பை உமிழ்வதும் சற்றும் அறமல்ல.

இப்படி ஒரு சிக்கலான சூழலை சீனா எப்படி எதிர் கொண்டது என்பதைத்தான் நாம் அவர்களிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும். சீனாவில் இப்படி ஒரு கொள்ளை நோய்
பரவத் துவங்கியதும் மாகாணங்களில் மனித நடமாட்டத்தை கட்டுப்படுத்தியது சீனா. சுகாதார மையங்கள், கல்லூரிகள் பள்ளிகள் என அனைத்தையும் தற்காலிக
மருத்துவமனைகளாக மாற்றினார்கள் சீனர்கள். கூடவே சீனாவில் 2500 படுக்கை வசதிகளுடன் கூடிய இரண்டு மருத்துவமனைகள் 10 நாட்களுக்குள் கட்டி முடிக்கப்பட்டது.
உணவைக் கூட ட்ரோன் மூலம் சப்ளே செய்தார்கள். ஓய்வை ஒதுக்கி வைத்து விட்டு முழுவீச்சில் வேலை செய்கிறார்கள் அங்குள்ள மருத்துவர்களும் செவிலியர்களும்.

இந்நோய் ஒருவேளை இந்தியாவை வீரியமாக தாக்கத் துவங்கினால் தற்காப்புக்கென முறையான கட்டமைப்பு வசதிகள் நம்மிடம் இருக்கிறதா என்றால்? அதற்கு நம்மிடம்
சரியான பதில் இல்லை. இங்கு ஏற்கெனவே இயங்கிவரும் அரசு மருத்துவமனைகளில் கொரோனா பாதிப்புக்கு என்று தனி வார்டுகள் அமைக்கப்படுகின்றன. உண்மையில்
இதனை சில மருத்துவ சங்கங்கள் கடுமையாக எதிர்க்கின்றன. இப்படியான கொள்ளை நோய்க்கு தனி மருத்துவமனைகளை உருவாக்காமல் ஏற்கெனவே இருக்கும்
மருத்துவமனையில் தனி வார்டுகளை உருவாக்குவதன் மூலம் அங்கு ஏற்கெனவே சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகள் எளிதில் இந்நோய் தொற்றுக்கு ஆளாக வாய்ப்பு
இருக்கிறது என்கிறார்கள் அவர்கள்.

மேலும் திடீரென கொரோனாவால் அவசர நிலை வந்தால் அதனை சமாளிக்கத் தேவையான கட்டமைப்பு நம்மிடம் இல்லை என்கின்றனர் வல்லுநர்கள். தமிழகம் முழுக்க
200 படுக்கைகள், 200 வெண்டிலேட்டர்கள் மட்டுமே ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக தெரிகிறது. இருப்பினும் இதனை எதிர்கொள்வதற்கும் இயக்குவதற்கும் தகுதியான பயிற்சி
பெற்ற மருத்துவக்குழு நம்மிடம் உள்ளனரா என்பதும் சந்தேகம்தான். உலகிலேயே இந்தியாவில் தான் 80%-க்கும் அதிகமான மருத்துவமனைகள் தனியாரிடம் உள்ளது.
குஜராத்தை ப்ளேக் நோய் தாக்கிய போது தனியார் மருத்துவமனைகளை எல்லாம் இழுத்து மூடிவிட்டுப் போய்விட்டார்கள்.

இதேபோல் 2002 - 2003 இல் பல நாடுகளில் சார்ஸ் நோய் பரவியது. அப்போது சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவர் சுஷ்மா ஸ்வராஜ். அரசு மருத்துவமனைகளில்
வெண்டிலேட்டர்கள் இல்லை. சார்ஸ் நம்மை தாக்கினால் தனியார் மருத்துவமனைகள் உதவ முன்வர வேண்டும் என அவர் அப்போது கேட்டுக் கொண்டார். ஆனால்
அதிர்ஷ்டவசமாக சார்ஸ் இந்தியாவில் பரவவில்லை. ஆனால் அரசு மருத்துவமனைகளின் உள்கட்டமைப்பு 2003 விட இப்போது பெரிய முன்னேற்றம் அடைந்துள்ளதாக
தெரியவில்லை.

80,000 நபர்களுக்கு மேல் பாதிக்கப்பட்ட சீனாவில் தற்போது நோய் கட்டுப்பாட்டிற்குள் உள்ளது என்றால் அவர்கள் போர்க்கால அடிப்படையில் அனைத்தையும்
செய்திருக்கிறார்கள். ஆனால் நாம் இன்னும் போர் வரட்டும் பார்க்கலாம் என்ற அளவில் தான் இருக்கிறோம். கொரோனா நோய்க்கு தடுப்பூசி கண்டுபிடிக்க சீனாவில்
மருத்துவக்குழு அமைக்கப்பட்டிருக்கிறது.

எச்.ஐ.வி, பன்றிக்காய்ச்சல் போன்ற நோய்களுக்கு பயன்படுத்தும் மருந்துகளை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுத்து சோதனை செய்து பார்த்திருக்கிறார்கள்
அவர்கள். அதனால் தான் தற்போது சீனாவில் நோயானது கட்டுப்பாட்டிற்குள் வந்திருக்கிறது. ஆகவே சீனர்களை வெறுக்க வேண்டாம் அவர்கள் மேற்கொண்ட அதிரடி
நடவடிக்கைகளிலிருந்து நாம் பாடம் படிப்போம்.