பிரிட்டனில் இதுவரை இல்லாத வேகத்தில் கொரோனா தொற்று பரவி வருவதாக பிரதமர் போரிஸ் ஜான்சன் கவலை தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் பேசிய அவர், பிரிட்டனில் இதுவரை அறிந்திராத வகையில், நேற்று ஒரே நாளில் 2 லட்சத்து 18 ஆயிரம் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருப்பதாகக் கூறினார். கொரோனாவால் முதியோர் பாதிக்கப்படுவது படிப்படியாக அதிகரித்து வருவது கவலை அளிப்பதாக அவர் தெரிவித்தார். இது பிரிட்டனின் தேசிய சுகாதார சேவை மீது அழுத்தத்தை அதிகரிக்கும் என்று பிரதமர் குறிப்பிட்டார். சரியான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி ஒமைக்ரான் அச்சுறுத்தலில் இருந்து மீண்டு வந்துவிட முடியும் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் போரிஸ் ஜான்சன் தெரிவித்தார்.
பிரிட்டனில் ஏறக்குறைய ஒரு கோடியே 40 லட்சம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஒரு லட்சத்து 49 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துவிட்டதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.