ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகர் அபுதாபியில் முதல் இந்து கோயில் கட்டுவதற்கு சனிக்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான இந்தியர்கள் கலந்துகொண்டனர்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் சுமார் 33 லட்சம் இந்தியர்கள் வாழ்கின்றனர். அவர்கள் வழிபாட்டுக்காக அங்கு இந்து கோயில் கட்ட பலவருடமாக கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. கடந்த 2015-ஆம் ஆண்டு அபுதாபிக்கு சுற்றுப்பயணம் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, இந்த கோரிக்கையை வைத்தார். இதை ஏற்றுக்கொண்ட அமீரக அரசு, துபாய்-அபுதாபி ஷேக் ஜாயித் சாலையில் உள்ள அல் ரக்பா பகுதியில் கோவில் கட்ட அமீரக அரசு அனுமதி அளித்தது.
அதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட கல்லை கொண்டு முதற்கட்ட அடித்தளம் அமைக்கும் பணிகள் நடந்தன. இந்த பூஜையை பாப்ஸ் அமைப்பின் தலைவர் மகந்த் சுவாமி மகராஜ் மற்றும் புஜ்யா இஸ்வர்சரண் சுவாமி ஆகியோர் நடத்தினர். பூஜைகள் நிறைவடைந்த பின்னர் அடிக்கல் நாட்டப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் ஏராளமான இந்தியர்கள் உற்சாகத்துடன் பங்கேற்றனர். ஐக்கிய அரபு அமீரக அமைச்சர்கள், இந்திய தூதர் நவ்தீப் சூரி ஆகியோ ரும் இந் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். பிரதமர் மோடி அனுப்பிய வாழ்த்தை நவ்தீப் வாசித்தார்.
இந்த கோவில் கட்டுவதற்கான கற்கள் அனைத்தும் இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து கொண்டு வரப்படுகிறது. அடுத்த ஆண்டுக் குள் கோவில் கட்டுமான பணிகள் நிறைவடையும். மத்திய கிழக்கு பகுதியில் கட்டப்பட இருக்கும் முதல் இந்து கோவில் இது என்பது குறிப் பிடத்தக்கது.