உலகம்

அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்ய தலையீடு உண்மைதான்: எப்.பி.ஐ. முன்னாள் தலைவர் வாக்குமூலம்

webteam

அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு இருந்தது உண்மைதான் என்று எப்.பி.ஐ. அமைப்பின் முன்னாள் தலைவர் ஜேம்ஸ் கோமே தெரிவித்துள்ளார். 

எப்பிஐ தலைவர் பதவியிலிருந்து அதிபர் டொனால் ட்ரம்ப்பால் நீக்கப்பட்ட ஜேம்ஸ் கோமே, அந்நாட்டு நாடாளுமன்ற செனெட் அவையில் ஆஜராகி ட்ரம்ப்புக்கு எதிராக வாக்குமூலம் அளித்தார். அவர் கூறுகையில், எப்பிஐ அமைப்பின் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. எப்பிஐ அமைப்பு, அதன் தலைவர் மீது மதிப்பை இழந்துவிட்டது என்று கூறியதன் மூலம் என்னையும், எப்பிஐ அமைப்பையும் ட்ரம்ப் நிர்வாகம் அவமதித்து விட்டது. என்னைப் பதவியில் இருந்து நீக்குவதற்காக ட்ரம்ப் நிர்வாகம் கூறிய காரணங்கள் குழப்பத்தையே ஏற்படுத்துகின்றன. ட்ரம்ப் என்னிடம் விடுத்த கோரிக்கைகள் கவலை அளித்தன. எப்பிஐ அமைப்பின் தலைவராக நான் இருந்தவரை, ட்ரம்ப்பிடம் விசாரணை நடத்தவில்லை என்று அவர் வாக்குமூலம் அளித்தார். 

அமெரிக்க புலனாய்வு அமைப்பான எப்பிஐ அமைப்பின் தலைவர் பதவியிலிருந்து ஜேம்ஸ் கோமேவை நீக்கி அதிபர் ட்ரம்ப் கடந்த மே 9ல் உத்தரவிட்டார். கடந்தாண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு இருந்தது தொடர்பான விசாரணைக் குழுவின் தலைவராக இருந்த கோமேவின் பதவி பறிக்கப்பட்டது அந்நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.