விண்வெளி மையத்திற்கு இனி சுற்றுலா பயணிகளை அனுப்ப நாசா திட்டமிட்டுள்ளது.
விண்வெளியில் சர்வதேச விண்வெளி மையத்தை அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட 13 நாடுகள் அமைத்து வருகின்றன. இதுவரை விண்வெளி வீரர்கள் மட்டுமே சென்றுவந்த விண்வெளி மையத்துக்கு இனி சுற்றுலா பயணிகளையும் அனுப்ப நாசா திட்டமிட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை நாசா நேற்று வெளியிட்டது.
அதன்படி அடுத்த ஆண்டு (2020) முதல் இந்தத் திட்டம் நடைமுறைக்கு வரும் என்றும், விண்வெளி மையத்தில் ஒரு இரவு தங்க 35 ஆயிரம் டாலர்கள் (Rs 24.28 லட்சம்) கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது 30 நாட்கள் கொண்ட பயணமாக இருக்குமென்றும் அதற்கு ஏற்ப கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் மூலம் வருடத்துக்கு இரண்டு பேர் மட்டுமே விண்வெளி மையத்துக்கு அழைத்துச்செல்லப்படுவார்கள் என்று நாசா கூறியுள்ளது. மேலும் தெரிவித்துள்ள நாசா, சர்வதேச விண்வெளி மையத்தை பராமரிக்கவும், எதிர்கால திட்டங்களுக்கும் நிதி தேவை என்பதால் தனியார் நிறுவன வர்த்தகத்துக்கு முடிவு செய்துள்ளோம் என்று குறிப்பிட்டுள்ளது.
ஏற்கெனவே 2001ம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த தொழிலதிபர் டென்னிஷ் டிட்டோ சர்வதேச விண்வெளி மையத்துக்கு சுற்றுலாவாக சென்று வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.