உலகம்

கொலம்பியா: காளைச் சண்டை திருவிழாவில் பார்வையாளர் மாடம் இடிந்து விழுந்து 4 பேர் பலி!

கொலம்பியா: காளைச் சண்டை திருவிழாவில் பார்வையாளர் மாடம் இடிந்து விழுந்து 4 பேர் பலி!

ச. முத்துகிருஷ்ணன்

கொலம்பியாவில், காளைச் சண்டை திருவிழாவின்போது, பார்வையாளர் மாடம் இடிந்து விழுந்த விபத்தில் நான்கு பேர் உயிரிழந்தனர். 300க்கும் அதிகமானோர் காயம் அடைந்துள்ளனர்.

கொலம்பியாவின் டோலிமா (Tolima) மாவட்டத்தில் எல் எஸ்பினால் ( El Espinal) நகரத்தில், கொரலேஜா ("corraleja" ) எனப்படும் பிரசித்தி பெற்ற காளைச்சண்டை திருவிழா நடைபெற்றது. போட்டி வளையத்திற்குள் காளைகள் அவிழ்த்துவிடப்பட, அவற்றை மாடுபிடி வீரர்கள் அடக்கும் இந்த பாரம்பரிய நிகழ்ச்சியின்போது, மரத்தால் ஆன 4 அடுக்கு பார்வையாளர் மாடத்தின் ஒரு பகுதி திடீரென சரிந்து விழுந்தது.

இதில் 4 பேர் உயிரிழந்தனர். 322 பேர் அருகில் உள்ள மருத்துவமனைகளில் காயங்களுடன் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டதாக டோலிமா ஆளுநர் தெரிவித்துள்ளார். காளைச்சண்டை விழாக்களின்போது இதுபோன்ற விபத்துகள் அடிக்கடி நேரிடுவதால் அவற்றுக்கு அந்தந்த மாநிலங்கள் தடை விதிக்க வேண்டும் என்று அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள குஸ்தாவோ பெட்ரோ (Gustavo Petro) வலியுறுத்தியுள்ளார்.