இஸ்ரேல் - கொலம்பியா ட்விட்டர்
உலகம்

”பாலஸ்தீனம் இறந்தால் மனிதநேயம் இறக்கும்” | இஸ்ரேலுடன் உறவை முறித்துக்கொள்வதாக கொலம்பியா அறிவிப்பு

கொலம்பிய அதிபர் கஸ்டாவோ பெட்ரோ, தனது நாடு இஸ்ரேல் உடனான ராஜ்ய உறவுகளை முறித்துக் கொள்வதாக அறிவித்துள்ளார்.

Prakash J

இஸ்ரேல் மீது கடந்த ஆண்டு (2023) அக்டோபர் 7ஆம் தேதி ஹமாஸ் அமைப்பினர் திடீர் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து இஸ்ரேல் பாதுகாப்புப் படை, காஸா நகர் மீது தாக்குதல் நடத்திவருகிறது. இதற்கு உலக நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இஸ்ரேலுக்கு நிதி மற்றும் ஆயுத உதவி செய்துவரும் அமெரிக்காவே போர் நிறுத்தம் வேண்டும் எனக் கூறியுள்ளது. ஆனால், அதைப் பற்றி கவலைப்படாமல் தொடர்ந்து இஸ்ரேல் போர் புரிந்து வருகிறது. இதனால், பலி எண்ணிக்கை 30 ஆயிரத்தையும் தாண்டியுள்ளதாகக் கூறப்படுகிறது

Israel - Hamas

இது ஒருபுறமிருக்க, மறுபுறம் காஸாவில் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலுக்கு எதிராக, அமெரிக்காவில் பாலஸ்தீன ஆதரவாளர்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டத்தின் நீட்சியாக அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகங்களிலும் போராட்டம் வெடித்துள்ளது.

நியூயார்க்கின் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் தொடங்கிய மாணவர்களின் உள்ளிருப்பு போராட்டம் ஹார்வர்டு, யேல், ஐவி லீக் ஸ்கூல், தெற்கு கலிபோர்னியா, டெக்சாஸ் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களிலும் பரவியது. இதில் ஈடுபட்டிருக்கும் மாணவர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

இதையும் படிக்க: பாலியல் குற்றச்சாட்டு புகார்|பிரிஜ் பூஷன் சிங்கிற்குப் பதில் அவரது மகனுக்கு சீட்.. பாஜக அறிவிப்பு

இந்த நிலையில், கொலம்பிய அதிபர் கஸ்டாவோ பெட்ரோ, தனது நாடு இஸ்ரேல் உடனான ராஜ்ய உறவுகளை முறித்துக் கொள்வதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து பொகோட்டாவில் நடைபெற்ற சர்வதேச உழைப்பாளர்கள் தின பேரணியில் பங்கேற்ற கஸ்டாவோ, “இஸ்ரேல் நாட்டுனான ராஜ்ய உறவுகள் முறிக்கப்படுகின்றன. படுகொலை நிகழ்த்தும் அதிபரை அந்நாடு கொண்டிருக்கிறது. பாலஸ்தீனம் இறந்தால் மனிதநேயம் இறக்கும், நாங்கள் அதனை அனுமதிப்பதில்லை” என தெரிவித்த அவர், “காஸாவில் நடைபெறும் மனித உரிமை மீறலை உலகம் வேடிக்கை பார்க்காது. அனைத்து நாடுகளும் தீவிர நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்” எனவும் வலியுறுத்தி உள்ளார்.

நெதன்யாகு

இதற்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்துள்ளது. அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ், ”குழந்தைகளை எரித்த, அவர்களைக் கொலை செய்த, பெண்களை பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கிய, அப்பாவி பொதுமக்களைக் கடத்திய, மனிதகுலம் அறிந்திராத இழிவான அரக்கர்கள் பக்கம் கஸ்டாவோ பெட்ரோ சாய்ந்துள்ளதை வரலாறு நினைவில்கொள்ளும்” என தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Gustavo Petro

ஹமாஸ் மீது போர் தொடுத்த நாள்முதலே, இஸ்ரேலை கடுமையாக விமர்சித்துவரும் பெட்ரோ, கடந்த ஆண்டு இறுதியில் இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சரை நாஜிக்களுடன் ஒப்பிட்டு கடுமையாக விமர்சித்திருந்தார். அதிலிருந்து, இஸ்ரேல் - கொலம்பியா இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது. மேலும், இஸ்ரேலுக்கான கொலம்பிய தூதரையும் பெட்ரோ திரும்பப் பெற்றார். தவிர, ஆயுதத் தளவாடங்கள் கொள்முதல் செய்வதையும் ரத்துசெய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல், இஸ்ரேல் உடனான வர்த்தகத்தை நிறுத்திக் கொள்வதாக துருக்கியும் தெரிவித்துள்ளது. காசாவில் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், துருக்கி அரசு வர்த்தக தடை விதித்துள்ளது.

இதையும் படிக்க: 2ஜி வழக்கின் தீர்ப்பை திருத்தம் செய்யக்கோரிய மத்திய அரசின் மனுவை நிராகரித்த உச்சநீதிமன்ற பதிவாளர்!