உலகம்

பருவநிலை மாறுபாட்டிற்காக 14 லட்சம் கோடி முதலீடு

webteam

பருவநிலை மாறுபாட்டால் உலகுக்கு பேராபத்து காத்திருப்பதாக பருவநிலை மாறுபாடு மாநாட்டில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

போலாந்தின் கடோவைஸ் நகரில் பருவநிலை மாறுபாடு தொடர்பான மாநாடு தொடங்கியுள்ளது. இதில் பாரிஸ் பருவநிலை மாறுபாடு உடன்பாடு குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. அப்போது உலகம் முழுவதும் வெப்பமயமாதல் பிரச்னை விஸ்வரூபம் எடுத்து வருவதால், பாரிஸ் பருவநிலை உடன்பாட்டின்படி கரியமில வாயுவை குறைக்கும் நடவடிக்கைகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. 

இம்மாநாட்டில் பங்கேற்ற ஐ.நா.வின் முன்னாள் தலைவ‌ர்கள் நான்கு பேரும் பேசுகையில், பருவநிலை மாறுபாட்டை கட்டுப்படுத்தாவிட்டால் உலக நாடுகளின் நிலைமை மோசமடையும் என எச்சரித்துள்ளனர். அடுத்த இரு ஆண்டுகளில் பருவ‌நிலை மாறுபாடு பிரச்னைக்கு தீர்வு காணாவிட்டால், உலக நாடுகள் மிகப் பெரிய ஆபத்தை சந்திக்க நேரிடும் என்றும் இம்மாநாட்டில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. 

இதற்கிடையே பருவநிலை மாறுபாடு பிரச்னைக்கு தீர்வு காண 14 லட்சம் கோடி ரூபாயை முதலீடு செய்யப் போவதாக உலக வங்கி வாக்குறுதி அளித்துள்ளது. கடந்த 10 வருடங்களாக உலகில் அதிக புயல்களும், நிலநடுக்கங்களும், காற்று மாசுபாடும் ஏற்பட்டு வருவதாக அண்மையில் தனியார் தொண்டு நிறுவனம் ஒன்று வெளியிட்ட ஆய்வறிக்கையில் கூறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், பருவ நிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் பெல்ஜியத்தில் உள்ள பிருஸெல்ஸ் நகரில் மாபெரும் பேரணி‌ நடைபெற்றது. இயற்கைக்கு எதிராக செயல்படுவதால் பருவநிலை மாறுவதாகவும், இதனால் மேக வெடிப்பு ஏற்பட்டு வெள்ளப்பாதிப்பு ஏற்படுவதாகவும் பேரணியின்போது விளக்கப்பட்டது.