உலகம்

அமெரிக்கா - சீனா இடையே வலுக்கும் 'டிக்டாக்' போர் !

அமெரிக்கா - சீனா இடையே வலுக்கும் 'டிக்டாக்' போர் !

webteam

டிக்டாக் செயலியை அமெரிக்கா  திருட முயல்வதை ஒரு போதும் ஏற்க முடியாது என்றும் அதற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்றும் சீனா எச்சரித்துள்ளது.

இணையத்தில் எங்கு நோக்கினும் பிரபலமாய் தென்பட்ட டிக்டாக், தற்சமயம் திரும்பும் திசையெங்கிலும் எதிர்ப்புகளை சந்தித்து வருகிறது. ஏற்கனவே இந்தியாவில் அந்தச் செயலிக்கு தடை விதிக்கப்பட்டது சீனாவுக்கு பெரும் இழப்பாக கருதப்படும் நிலையில் அமெரிக்காவும் தற்போது அதன்மீது கடும் அழுத்ததை கொடுத்து வருகிறது.

டிக்டாக் செயலியின் அமெரிக்க செயல்பாடுகளை விலைக்கு வாங்க அதன் தாய் நிறுவனமான பைட் டான்ஸுடன் மைக்ரோசாப்ட் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்த நடவடிக்கைக்கு தலையசைத்த அதிபர் ட்ரம்ப், செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் ஒப்பந்தம் முடிந்தாக வேண்டும் என்றும்  இல்லையேல் அமெரிக்காவில் டிக்டாக் செயலி தடை செய்யப்படும் என அவர் உறுதிப்பட அறிவித்துள்ளார்.

இதனைக் கேட்டு கொதித்துப்போன சீனா, சீன தொழில்நுட்ப நிறுவனம் திருடப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அதனை செய்ய முயற்சிக்கும் ட்ரம்பின் அரசுக்கு பதிலடி கொடுக்க நிறைய வழிகள் உள்ளன என்றும் கூறியுள்ளது. அரசால் அனுமதிக்கப்பட்ட திருட்டில் பங்கேற்க அமெரிக்க நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்படுவதாகவும் சீனா கடுமையாக விமர்சித்துள்ளது. பைட் டான்ஸ் நிறுவனர் ZHANG YIMING என்பவரும் , அமெரிக்கா அவசரப்படுத்துவதாகக் கூறியுள்ளார். ஆனால் மைக்ரோசாப்ட் நிறுவனம், டிக்டாக்கை கைப்பற்றும் பேச்சுவார்த்தையை துரிதப்படுத்தியுள்ளது.