உலகம்

தலிபான்களுடன் அமெரிக்க உளவுத்துறை அமைப்பான சிஐஏயின் இயக்குநர் ரகசிய சந்திப்பு

தலிபான்களுடன் அமெரிக்க உளவுத்துறை அமைப்பான சிஐஏயின் இயக்குநர் ரகசிய சந்திப்பு

PT WEB

ஆப்கானிஸ்தானில், தலிபான் பிரதிநிதிகளுடன், அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏயின் இயக்குநர் வில்லியம் பர்ன்ஸ், ரகசிய பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

ஜி7 நாடுகளின் கூட்டத்துக்கு முன்னதாக காபூல் சென்ற சிஐஏ இயக்குநர் வில்லியம் பர்ன்ஸ், தலிபான் அமைப்பின் மூத்த தலைவர் அப்துல் கனி பரதரை சந்தித்துப் பேசியுள்ளார். சந்திப்பின் விவரங்கள் வெளிவராத நிலையில், வரும் 31-ம் தேதியுடன் ஆப்கானிஸ்தானில் இருந்து, அமெரிக்கா முழுமையாக வெளியேறுவது குறித்து பேசப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. 31-ம் தேதிக்குள் அமெரிக்கப்படைகள் முழுமையாக வெளியேறவேண்டும் என்றும், அதற்கு மேல் காலஅவகாசம் தர இயலாது என்றும் தலிபான் தரப்பில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஆப்கானிஸ்தானில் இருந்து ஆப்கானியர்கள் யாரும் வெளியேறுவதை அனுமதிக்கமுடியாது என்றும் தலிபான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகளுக்கு ஆதரவாக செயல்பட்ட, சுமார் 80 ஆயிரம் ஆப்கானியர்கள், தங்கள் தேசத்தை விட்டு வெளியேற விரும்பும்நிலையில், தலிபான் தரப்பில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கிடையே ஆப்கானில் இருந்து முழுமையாக அமெரிக்கா வெளியேறுவது தலிபான் ஒத்துழைப்பிலேயே இருப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.