உலகம்

கணவரின் தாக்குதலால் ஜன்னலில் இருந்து குதித்த பெண்... சீனாவில் விவாதமான வீடியோ

webteam

சீனாவின் சாங்க்யூ நகரில் சிசிடிவியில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பதிவான ஒரு வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அதில் கணவரால் தாக்கப்பட்ட லியூ ஜென்க்யான் என்ற பெண் ஜன்னல் வழியாக குதித்து கீழே விழுந்துள்ள காட்சி இடம்பெற்றுள்ளது.

மேலும், மனைவியின் கடையின் உள்ளே காணப்படும் கணவனும் மனைவியும் சிசிடிவியில் படம்பிடிக்கப்பட்டுள்ளனர். அப்போது கணவன் மனைவியைப் பிடித்து கீழே தள்ளுகிறான், அறைகிறான், அந்த தளத்தில் முடியைப் பிடித்து இழுத்துவருகிறான். கடந்த ஆண்டில் பதிவான இந்த சிசிடிவி காட்சிகள் இணையத்தில் பரவி சீனாவில் பெண்களுக்கான எதிரான குடும்ப வன்முறை பற்றிய சூடான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் மத்திய சீன நகரமான சாங்க்யூவில் நடந்துள்ளது. கணவனின் தாக்குதலில் தப்பித்த பெண் லியூ ஜென்க்யான், தப்பிப்பதற்கு இரண்டாவது தளத்தில் இருந்த ஜன்னலைத் தவிர வேறு வழி தெரியவில்லை என்று பின்னர் தெரிவித்தார். கணவனின் கண்மூடித்தனமான தாக்குதலில் இருந்து தப்பித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற லியூ, கணவனிடமிருந்து விலகிச்செல்வதே நல்லது என்றார்.

ஆனால் நீதிமன்றம் விவகாரத்து தர மறுத்துவிட்டது. இதுபற்றிய விவாதம் சீனாவில் தொடர்ந்தது. குடும்ப வன்முறையில் அதிகம் பாதிக்கப்படும் பெண்களுக்கு நீதி வேண்டும் பெண்களும் சமூக ஆர்வலர்களும் உரத்த குரல் கொடுக்கத் தொடங்கினர். இந்த வீடியோவை ஜூலை 28 ஆம் தேதியன்று வெளியிட்டு, மூன்று வாரங்களுக்குப் பிறகு லியூ ஜென்க்யானுக்கு விவாகரத்து வழங்கப்பட்டது.

"நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். மீண்டும் என் கடையைத் திறப்பதற்கான ஏற்பாடுகளில் இருக்கிறேன். கடைசியில் எனக்குத் தேவையானதாக இருந்ததோ அது கிடைத்தது" என்று உற்சாகம் தெரிவித்துள்ளார் லியூ.