அடுத்து நீ தான்.. உனக்கு எப்போ? கல்யாண சாப்பாடு எப்போ போட போற? போன்ற கேள்விகளை கடக்காதவர்களே இருக்க முடியாது. பெற்றோர், உறவினர் தொடங்கி செல்லுமிடமெல்லாம் யாரென்றே தெரியாதவர்கள் கூட நித்தமும் இதே கேள்வியை கேட்பது ஒரு வாடிக்கையான பழக்கமாகவே ஆகிவிட்டது.
இதே மனநிலையில் இருந்த பெண் ஒருவர் தன்னுடைய 38 வயது மகனை மனநல மருத்துவரிடம் அழைத்துச் சென்ற சம்பவம் சீனாவில் நடந்தது தற்போது வெளியாகியிருக்கிறது. மத்திய சீனாவின் ஹெனான் மாகாணத்தைச் சேர்ந்த வாங் என்ற புனைப்பெயரை கொண்ட நபர் இதுநாள் வரை வீட்டுக்கு எந்த புத்தாண்டுக்கும் ஒரு பெண் தோழியையும் அழைத்து வராததால் அவரது தாயார் மிகுந்த கவலைக்கு ஆளாகியிருக்கிறார்.
இதனால் தனது மகனுக்கு உடல் மற்றும் மன ரீதியாக ஏதேனும் பிரச்னை இருக்குமோ என எண்ணியவர் ஒவ்வொரு சந்திர புத்தாண்டுக்கு பிறகும் மனநல மருத்துவமனைக்கு மகனை அழைத்துச் செல்வதை அந்த தாய் வாடிக்கையாக கொண்டிருந்திருக்கிறார். இது 2020ம் ஆண்டில் இருந்து தொடர்ந்து வந்திருக்கிறது.
அந்த வகையில் இந்த ஆண்டும் மகன் வாங்-ஐ மனநல மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல திட்டமிட்டிருந்தபடி கடந்த பிப்ரவரி 4ம் தேதி ஹெனான் மாகாணத்தில் உள்ள ஒரு Psychiatric மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார் அந்த தாய்.
அப்போது, மருத்துவமனையில் இருவரும் எதிர்பார்க்காத வகையில் வாங்கிடமும் அவரது தாயிடமும் கூறியதுதான் ஆச்சர்யமாக இருந்திருக்கிறது. அதாவது, வாங்கிற்கு எந்த பாதிப்பும் இல்லை. அவர் நன்றாக இருக்கிறார். ஆனால் மகனை திருமணம் செய்துக்கொள்ளும்படி நிர்பந்தித்து வருவதால் உங்களுக்குதான் மனநல கோளாறு ஏற்பட்டிருக்கிறது என வாங்கின் தாயாரிடம் கூறியிருக்கிறாராம் மருத்துவர்.
இது குறித்து தி பெய்ஜிங் நியூஸ் தளத்திடம் பேசியிருக்கும் வாங், “திருமணமாகவராக அறியப்பட வேண்டும் என்பது என் நோக்கமல்ல. ஆனால் இதுவரை சரியான நபரை சந்திக்கவில்லை. நான் கல்யாணம் செய்துக்கொள்ளாததால் என் அம்மா தூங்குவதே இல்லை.
இது ரொம்பவே வருத்தமாக இருக்கிறது. அம்மாவின் விருப்பத்திற்காகவே அவருடன் மனநல மருத்துவரிடம் சென்றேன். நான் இருக்கும் பகுதியில் வயதான சிங்கிலாகவே அறியப்படுகிறேன். பெய்ஜிங்கில் ஒரு வீடு வாங்குவதற்கென முதல் தவணை செலுத்த கூட என்னிடம் சேமிப்பு ஏதும் இல்லை. யார் என்னை கல்யாணம் செய்துக்கொள்வார்கள்?” என கேட்டுள்ளார்.
பெய்ஜிங்கில் பல ஆண்டுகளாக தங்கியிருந்த வாங் முன்பு நடிகராக இருந்தார். தற்போது டென்னிஸ் பயிற்சியாளராக இருக்கிறார் என்றும் தி பெய்ஜிங் நியூஸ் குறிப்பிட்டிருக்கிறது. இதனிடையே, ஒரு புத்தாண்டுக்கு கூட பெண் தோழியை வீட்டுக்கு அழைத்துச் செல்லாதது பற்றி வாங் பேசிய வீடியோ சீன சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வைரலாகி வருவதாக சோஹு நியூஸ் பதிவிட்டிருக்கிறது.
அதில், “சாதாரணமாக கல்யணாம் செய்துக்கொண்டு வாழ்பவர்களே மன ரீதியாக பல பாதிப்புகளை சந்திக்கிறார்கள்” என்றும், “திருமணமாகாவிட்டால் ஏன் இந்த சமூகம் எங்களை போன்றோரை ஏதோ பாவம் செய்தவர்களை போல பார்க்கிறது?” என்றும் கேள்விகளை எழுப்பியிருக்கிறார்கள்.