முத்தம் என்பது ஓர் அன்பின் வெளிப்பாடு. காதலை வெளிப்படுத்துவதில் முத்தத்துக்கு ஈடு வேறு எதுவுமில்லை. முத்தம் ஒரு நல்ல உணர்வைக் கொடுப்பதோடு, நம் உடல் ஆரோக்கியத்திற்கும் வழிவகுப்பதாகச் சொல்லப்படுகிறது. அப்படியான முத்தத்தை எங்கு வேண்டுமானாலும் தரலாம் என்றாலும் உதட்டில் தரப்படும் முத்தம்தான் காதலுக்கு செய்யப்படும் மரியாதை என்பது பலருடைய அபிப்ராயம். அத்தகைய முத்தம் கொடுப்பதிலும் சில முறைகள் உள்ளன; பல வகைகள் உள்ளன.
அந்தவகையில் காதலர்கள் அடிக்கடி கொடுத்துக்கொள்வது லிப்லாக் (Lip Lock) முத்தம். உதட்டோடு உதடு அழுத்தமாகப் பதிய, காதலரின் மேல் உதட்டையும் கீழ் உதட்டையும் மாறிமாறி முத்தமிடும் முறைதான் இந்த லிப் லாக் முத்தம். அப்படி, லிப்லாக் முத்தம் கொடுக்கும்போது, உடலில் குறிப்பாக நரம்பு மண்டலங்களில் நிறைய மாற்றங்கள் நிகழ்வதாக கூறப்படுகிறது. அவை நல்ல மாற்றங்களை உடலில் ஏற்படுத்துகின்றன என்று கூறுகிறார்கள். என்றாலும் அதிலும் பல்வேறு பாதிப்புகளும் இருக்கத்தான் செய்கின்றன. அப்படியான லிப் லாக் முத்தத்தின்போது, காதலர் ஒருவருக்கு காது கேட்கும் திறனே போயிருப்பதுதான் அதிர்ச்சியையும் வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
சீனாவின் கிழக்கு ஜெஜியாங் மாகாணத்தில் உள்ள மேற்கு ஏரியில் கடந்த ஆகஸ்ட் 22ஆம் தேதி, காதல் ஜோடி ஒன்று டேட்டிங்கில் இருந்துள்ளனர். அப்போது அங்கு இருவரும் 'லிப் லாக்' முத்தம் கொடுத்துள்ளனர். இருவரும் உதட்டோடு உதட்டை வைத்து சுமார் 10 நிமிடங்களுக்கு விடாமல் முத்தம் கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தநிலையில் திடீரென்று காதலனின் காதில் ஊசி குத்துவதுபோன்று வலி ஏற்பட்டுள்ளது. இதுபற்றி அவர் தனது காதலியிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவர்கள் இருவரும் அங்கேயே சிறிது நேரம் அமர்ந்துள்ளனர்.
ஆனால் காதலனின் காதில் ஏற்பட்ட வலி நேரம் செல்லச்செல்ல அதிகரித்ததோடு, அவரின் கேட்கும் திறனும் குறைந்துள்ளது. இதையடுத்து உடனடியாக இருவரும் மருத்துவமனைக்குச் சென்றனர். அங்கு காதலனுக்கு மருத்துவர்கள் பரிசோதனைகள் மேற்கொண்டனர். அப்போது அவரது காதின் நடுப்பகுதியில் இருந்து வெளிப்புற பகுதியைப் பிரிக்கும் சிறிய மெல்லிய சவ்வு போன்ற பகுதியில் சிறு அளவிலான 2 துளைகள் இருப்பது தெரியவந்தது. அதுதான் அவரது காது வலிக்கு காரணம் என்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர்.
”உணர்ச்சிவசப்பட்டு கொடுக்கும் முத்தம் காதுக்குள் காற்றழுத்தத்தில் விரைவான மாற்றத்திற்கு வழிவகுக்கும்” என அவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். அவர் முழுமையாக குணமடைய 2 மாதங்கள் ஆகும் என்று தெரிவித்துள்ளனர். காதலன், காதலிக்கு கொடுத்த உதட்டு முத்தத்தால் காது கேட்கும் திறனையே இழந்த சம்பவம் காதலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
சீனாவில் நடப்பது இது முதல்முறையல்ல எனவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதற்கு முன்பு கடந்த 2008ஆம் ஆண்டில் தெற்குச் சீனாவைச் சேர்ந்த இளம்பெண்ணும், அதேபோல் தெற்கு குவாங்டாங் மாகாணத்தின் ஜூஹாய் பகுதியைச் சேர்ந்த 20 வயது இளம்பெண்ணும் இதேபோல் பாதிக்கப்பட்டதாகவும், சிகிச்சைக்கு பிறகு அவர்கள் மீண்டதாகவும் தெரிவித்துள்ளன.
அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்று சொல்வது இதற்கு பொருந்தும் தானே..