மாரத்தான் ஓடுவதற்கான முக்கிய காரணமே ஃபிட்னெஸ் மற்றும் உடல் ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்குத்தான். மாரத்தான் ஓடுவது என்பது அவ்வளவு எளிதல்ல. அதற்கு முறையான பயிற்சியும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையும் கடைப்பிடிக்கப்படுவது அவசியம். மேலும், மாரத்தான் ஓடுபவர்கள் பெரும்பாலும் ஹெல்த் கான்ஷியஸாகத்தான் இருப்பார்கள் என்பது நாம் அனைவரும் நன்கு அறிந்ததே. ஆனால் அந்த கருத்தை பொய்யாக்கி இருக்கிறார் சீனாவைச் சேர்ந்த 50 வயது நபர். தொடர் புகைபிடிக்கும் பழக்கமுடைய உன்கில் சென் என்ற சீன நபர், சிகரெட் பிடித்துக்கொண்டே தனது மாரத்தானை ஓடி முடித்திருக்கிறார்.
புகைப்பிடித்தல் ஓடும் திறனை முடக்கிவிடும் என்பது பொதுவான கருத்து. புகைபிடிக்கும்போது இதயம், நுரையீரல் மற்றும் தசைகளுக்கு செல்லும் ஆக்சிஜன் அளவு குறைகிறது. இதனால் நீண்ட நேரம் ஓடமுடியாது. ஆனால் 50 வயதான சென், ஜியாந்தேவில் நடைபெற்ற Xin'anjiang மாரத்தானில் 42 கி.மீ தூரம் ஓடி தனது ஓட்டத்தையும் முடித்துள்ளார். நவம்பர் 6ஆம் தேதி நடந்த ஓட்டத்தில் கலந்துகொண்ட சென், சிகரெட் பிடித்துக்கொண்டே ஓடி, 3 மணிநேரம் 28 நிமிடங்களில் தனது ஓட்டத்தை முடித்துள்ளார். அதே நேரத்தில் போட்டியிட்ட கிட்டத்தட்ட 1500 ஓட்டப்பந்தய வீரர்களில் ஒட்டுமொத்தமாக 574வது இடத்தைப் பிடித்தார்.
ஓட்டப்பந்தயத்தின்போதே புகைபிடித்துக்கொண்டே சென் ஓடிய புகைப்படங்கள் வெய்போ என்ற சீன சமூக வலைதளப்பக்கத்தில் பரவி வைரலாகி வருகிறது. அதேநேரத்தில் நிகழ்ச்சி அமைப்பாளர்கள் போட்டியில் வெற்றிபெற்ற சென்னின் சான்றிதழ் மற்றும் சாதனையை பகிர்ந்து பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.
உன்கில் சென் இதுபோன்று விசித்திரமாக நடந்துகொள்வது இது முதன்முறையல்ல. 2018 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் நடந்த மாரத்தான் போட்டிகளிலும் இதேபோன்று கையில் சிகரெட்டுடன் ஓடிய வீடியோ வைரலானது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும் புகைப்பிடித்தல் என்பது உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்கக்கூடியது என்றே மருத்துவ வல்லுநர்கள் உறுதியாக கூறி வருவதை நினைவுகூர்வது இங்கே முக்கியமானது.