சீனாவில் இன்றைய இளசுகள் பேஷன் என்ற பெயரில் தோல் மீது விதவிதமான வடிவங்களில் தையல் போட்டுக்கொள்ளும் விநோத பழக்கம் ட்ரெண்ட் ஆகி வருகிறது
சமீப காலமாக ஆண், பெண் என இருவரும் காது, மூக்கு மட்டுமின்றி புருவங்களிலும் தோடு குத்திக்கொள்ளும் பேஷன் நடைமுறையில் உள்ளது. அதுமட்டுமின்றி வலித்தாலும் பரவாயில்லை என டாட்டூ போன்ற விபரீத பேஷன்களும் இளைஞர்கள் உலா வருவது உண்டு. அந்த வகையில் தோல் மீது விதவிதமான வடிவங்களில் தையல் போட்டுக்கொள்வது தற்போதைய பேஷனாக சீனாவில் வலம் வருகிறது. சமீப வாரங்களாக சீனாவில் உள்ள இணைய பயன்பாட்டாளர்கள் சமூக ஊடகங்களில், தங்களுடைய தோலிற்குள் போடப்பட்ட தையல் வடிவங்களை புகைப்படங்களாக பகிர்ந்து வருகின்றனர்.
இத்தகைய செயல் விபரீத விளையாட்டான ''ப்ளூ வேல்'' என்பதன் நிழலே. அதாவது ப்ளூ வேல் என்பது தன்னை தானே வருத்திக்கொண்டு சுயமாக காயம் ஏற்படுத்தி கொள்வது மற்றும் தற்கொலை செய்து கொள்ளும் சர்ச்சைக்குரிய விளையாட்டு. தங்களுடைய கைகள், கால்கள் ஏன் உதடுகளில் கூட வண்ண நூல்களை கொண்டு தோலிற்கு டாட்டூ போன்று குறிப்பிட்ட வடிவங்களை தைத்துள்ளனர். அலங்காரத்திற்காக அந்த தையல்களில் குண்டுமணிகளை மாட்டியும், ரிப்பன்களை சேர்த்தும் தைத்துள்ளனர்.
இந்த புகைப்படங்களை பார்த்து சமூக வலைதளங்களில் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். இது போன்று செய்வது பைத்தியக்காரத்தனம், எதற்காக இப்படி செய்கிறார்கள் என கவலை தெரிவித்தும் உள்ளனர். இது போன்ற ஸ்டைல் எப்படி இளைஞர்களிடம் பிரபலமானது என ஆய்வு நடத்திய போது டோக்கியோ கோல் என்ற ஜப்பானிய காமிக் கதாபாத்திரத்தை கண்டு சீனாவில் இது பிரபலமானது தெரியவந்துள்ளது.
அதுமட்டுமின்றி, கடந்த மே மாதம் China.cn என்ற இணைய தளத்தில் ‘ப்ளூ வேல்’மற்றும் அதன் தொடர்பான சொற்கள் அதிகமாக தேடப்பட்டது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.