சுதந்திரக் காற்றைச் சுகமாய் நேசிக்கும் சுயமரியாதை தரப்படுகிற உலகில், இரு மனங்களுக்கு இடையே இறுக்கிப் பிடிக்கப்படும் வாழ்வு என்பது கசப்பாகவே அமைகிறது. அதாவது வாழ்க்கை அல்லது காதல் என எதுவாக இருந்தாலும், ’அவருடன் பழகாதே, அவருடன் வெளியே செல்லாதே, எங்கே இருக்கிறாய், யார்கூட இருக்கிறாய், என்ன செய்கிறாய்’ என ஓயாமல் கேள்வி கேட்டு நச்சரிக்கும் குணம் கொண்ட மனத்தவரால் தொடர்ந்து பயணிப்பது என்பது ஒரு சவாலான விஷயம். இத்தகைய காதலைத்தான் மனோதத்துவ நிபுணர்கள், 'டாக்ஸிக் காதல்' (toxic love) என்கிறார்கள்.
தன்னுடன் பழகும் அல்லது பிடித்தமான நபர் ஒருவர், தனக்குப் பிடித்ததை மட்டுமே செய்ய வேண்டும் என நினைத்து அவர்களை ஒருவித வன்முறை குணத்தோடு அணுகுவதுதான் 'டாக்ஸிக் காதல்'. இது, படத்தில் (சமீபத்தில் வெளியான ’லவ்வர்’ படத்தில் இதுகுறித்து காட்டப்பட்டிருக்கும்) மட்டும் நடைபெறுவதில்லை. நிஜமாகவே நிறையப் பேர் இப்படியான ஒரு மனநோய்க்கு ஆளாகின்றனர். அதுபோன்ற சம்பவம் சீனாவிலும் ஒருவருக்கு ஏற்பட்டுள்ளது.
சீனாவைச் சேர்ந்தவர் சியாயு (Xiaoyu). 18 வயதான இந்தப் பெண், தாம் படிக்கும் பல்கலைக்கழகத்திலேயே இளைஞர் ஒருவரைக் காதலிக்கத் தொடங்கினார். அவரும், இவருடைய காதலை ஏற்றுக்கொள்ள இருவரும் காதலர்களாகினர். ஒருகட்டத்தில், அந்த இளைஞர் மீது சியாயு, அளவுகடந்த காதலை வைக்க, அதுவே அவருக்கு தற்போது பிரச்னையை ஏற்படுத்தி உள்ளது. ஆம், தனது காதலன் தன்னைச் சார்ந்தே இருக்க வேண்டும்; தன்னுடன் மட்டுமே பேச வேண்டும் என நினைத்த சியாயு, தொடர்ந்து தொலைபேசியில் போன்செய்து தொல்லை செய்ய ஆரம்பித்திருக்கிறார்.
’எங்கே இருக்கிறாய், என்ன செய்கிறாய்..’ என இப்படியான கேள்விகளை, ஒருநாளைக்கு 100லிருந்து 120 முறை வரையாவது தொலைபேசியில் அழைத்து அவரை நச்சரித்து உள்ளார். இதனால் அந்த இளைஞர், மிகப்பெரிய மன அழுத்தத்தைச் சந்தித்துள்ளார். தவிர, தனது வழக்கமான பணிகளை மேற்கொள்ள முடியாமல் தவித்துப்போய் இருக்கிறார்.
இதையடுத்து, இதற்குத் தீர்வுகாணும் வகையில் அந்தப் பெண்ணின் அழைப்பை ஏற்கவும் மறுத்த அவர், அடுத்து தொலைபேசியையே அணைத்து வைத்துவிட்டார். இதனால் ஆத்திரப்பட்ட சியாயு, வீட்டில் உள்ள டி.வி., பிரிட்ஜ் உள்ளிட்ட பொருட்களை உடைத்ததோடு தற்கொலை மிரட்டலும் விடுத்திருக்கிறார்.
இந்த நிலையில்தான் காதலியின் தொல்லை தாங்கமுடியாமல் காவல் நிலையத்தை நாடி இருக்கிறார் அந்த இளைஞர். இதையடுத்து அந்தப் பெண்ணை மீட்ட போலீசார், தற்போது அவரை மருத்துவமனையில் அனுமதித்து மனநல சிகிச்சை கொடுத்து வருகின்றனர்.
இந்த விவகாரம் தொடர்பாக பேசிய மருத்துவர் லூ நா, "காதலில் இருப்போர் எதிர்பாலினத்தவரை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முயற்சிப்பர். அவ்வாறு முடியவில்லை என்றால் இதுபோல வெறித்தனமாக நடந்துகொள்வதையே love brain (காதல் மூளை) என காதல் உறவில் சொல்லப்படுகிறது.
ஆனால் இது மருத்துவச் சொல் கிடையாது. அதேநேரத்தில், காதல் பிரச்னையால் ஏற்படும் கவலை, மனச்சோர்வு போன்றவற்றுடன் சேர்ந்து இது வெளிப்படுகிறது. குழந்தைப் பருவங்களில் பெற்றோருக்கு இடையே ஏற்பட்ட சிறுசிறு பிரச்னைகள் என சந்தித்து வளர்ந்தவர்களுக்கு காதல் மூளை கோளாறு ஏற்படுகிறது.
மேலும் ஏற்கெனவே மனச்சிதைவு உள்ளவர்களுக்கு காதலின்போது 'டோபமைன்' அதிக அளவில் சுரப்பதாலும் இந்தப் பிரச்சனை ஏற்படும். எனவே இதுபோன்று பிரச்னைகளை எதிர்கொள்ளும் காதலர்கள் மருத்துவர்களை சந்திப்பது அவசியம்” எனத் தெரிவித்துள்ளார்.