model image x page
உலகம்

‘அந்த ஆண்டில் பிறந்தவர்கள் வேண்டாம்’ - வேலை கொடுக்க கண்டிஷன்போட்ட சீன நிறுவனம்.. ஏன் தெரியுமா?

Prakash J

நாளுக்குநாள் பெருகிவரும் அறிவியல் வளர்ச்சியால் விஞ்ஞான உலகமே வியந்துபோய் நிற்கிறது. அப்படிப்பட்ட உலகில் இன்னும் மூடநம்பிக்கைகள் பற்றிய விஷயங்களால் மக்கள் பின்னோக்கிச் செல்வதுதான் வேதனையான விஷயமாக உள்ளது. அந்த வகையில், சீனாவைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று, குறிப்பிட்ட ஆண்டில் பிறந்தவர்களை மட்டும் தங்கள் நிறுவனத்தில் வேலைக்கு சேர்க்க மாட்டோம் என அறிவித்திருப்பது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென்சீனாவில் உள்ள குவாங்டாங் (Guangdong) மாகாணத்தில், சன்க்ஸிங் ட்ரான்ஸ்போர்ட்டேஷன் (Sanxing Transportation) என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதேநேரத்தில், ஒரு குறிப்பிட்ட ஆண்டில் பிறந்தவர்கள் வேலைக்கு விண்ணப்பிக்கக் கூடாது எனக் கேட்டுக் கொண்டுள்ளது. பொதுவாக, நம்மூரில் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளைக் கொண்டிருப்பதைப் போல, சீனாவில் எலி முதல் பன்றி வரை விலங்குகளின் அடையாளங்கள் ராசிகளாக கூறப்படுகிறது. அதாவது, அந்த விலங்குகளின் ஆண்டுகளில் பிறந்தவர்களைக் கொண்டு அவர்களின் எதிர்காலம் கணக்கிடப்படுகிறது.

இதையும் படிக்க: ‘இந்தியாவில் பெரிய சம்பவம் இருக்கு’ - ஹிண்டன்பர்க்கின் அடுத்த பதிவு.. அச்சத்தில் நிறுவனங்கள்!

அதாவது, சந்திர நாட்காட்டியை அடிப்படையாக கொண்ட சீன ஜோதிடத்தில், ஒவ்வொரு ராசியும் ஒவ்வொரு மிருகத்தைக் குறிக்கிறது. 12 மிருகங்களின் (எலி, எருது, புலி, முயல், டிராகன், பாம்பு, குதிரை, செம்மறி ஆடு, குரங்கு சேவல், நாய், பன்றி) பெயராலேயே ஒவ்வோர் ஆண்டும் அழைக்கப்படுகிறது. 12 வருடங்களுக்குப் பின் மீண்டும் அந்த வருட பெயர் வருவது ஒரு சுழற்சி என கூறப்படுகிறது. அதாவது, இந்த ஆண்டு எந்த மிருகத்தின் பெயரில் ஆண்டு வந்திருக்கிறதோ, அது, அடுத்து 12 ஆண்டுகள் கழித்து வரும். அந்த வகையில், நாய்கள் ஆண்டுகளான 1922, 1934, 1946, 1958, 1970, 1982, 1994, 2006, 2018 ஆகிய ஆண்டுகளில் பிறந்தோர் விண்ணப்பிக்கக்கூடாது என அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

அந்த நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருப்பவர் டிராகன் ஆண்டுகளில் (1916, 1928, 1940, 1952, 1964, 1976, 1988, 2000, 2012) பிறந்தவர். தவிர, சீனாவில் தற்போது டிராகன் ஆண்டுதான் நடைபெறுகிறது. இதனால் டிராகன் ஆண்டுகளில் பிறந்தவருக்கும், நாய் ஆண்டுகளில் பிறந்தவருக்கும் பொருந்திவராதாம். நாய் ஆண்டுகளில் பிறந்தவர்கள் அந்த நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தால் துரதிர்ஷ்டத்தை கொண்டுவருவார்கள் என்ற நம்பிக்கையிலேயே அவர்களை விண்ணப்பிக்ககூடாது என அந்த நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்து அந்த நிறுவன ஊழியர்களில் சிலர், "ஒவ்வோர் விலங்கின் ஆண்டுகளும் உலோகம், மரம், நீர், நெருப்பு மற்றும் பூமி ஆகிய 5 கூறுகளுடன் தொடர்புடையது. இதில் டிராகன் தண்ணீர் பிரிவிலும், நாய் நெருப்பு பிரிவிலும் வரும். எனவே, இருதரப்பும் இணைந்து எதையுமே செய்ய முடியாது. இதன் காரணமாகவே அப்படியொரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது” என்கின்றனர்.

இந்த விவகாரம் சீனாவில் பேசுபொருளான நிலையில், Hubei Chisheng சட்ட நிறுவனத்தின் வழக்கறிஞர் Wu Xingjian, “இந்த அறிவிப்பு பாரபட்சமானதாகக் கருதப்பட்டாலும், அது சீனாவில் எந்த குறிப்பிட்ட சட்ட விதிகளையும் மீறவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: கர்நாடகா: குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட முட்டைகள்.. போட்டோ எடுத்தபின்பு தூக்கிய ஊழியர்கள் #Video